காங்கிரசில் யார் முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை - கபில் சிபல் சர்ச்சைக் கருத்து!


காங்கிரசில் யார் முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை - கபில் சிபல் சர்ச்சைக் கருத்து!
x
தினத்தந்தி 29 Sep 2021 11:56 AM GMT (Updated: 29 Sep 2021 11:56 AM GMT)

நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் முதல்-மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி  சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.

இதை தொடர்ந்து முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். 

தொடர்ந்து சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் நேற்று திடீர் பயணமாக  டெல்லி சென்றார்.  அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.அமரிந்தர் சிங் திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றதால் அவர் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டன. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக  நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.  தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.

நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் 

காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவர்கள் என்று யாரும் இல்லை.முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் என்று என்று தெரியவைல்லை. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காங்கிரசில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும்.

கட்சித் அமைப்புத் தேர்தல் கோரிக்கையை ஜி -23 தலைவர்கள்  கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகியும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கூறி உள்ளார்.

Next Story