மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?


மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதி வாக்குப்பதிவு: 3 மணி நிலவரம் என்ன...?
x
தினத்தந்தி 30 Sep 2021 11:05 AM GMT (Updated: 30 Sep 2021 11:05 AM GMT)

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இதுவரை 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பா.ஜனதா வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். ஆனால், அந்தத் தோல்வியை ஏற்காத மம்தா பானர்ஜி, நீதிமன்றத்தில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். 

இந்த சூழலில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக பதவி ஏற்று 6 மாதத்துக்குள் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்க வேண்டும் இல்லாவி்ட்டால் முதல்-மந்திரி பதவியிலிருந்து இறங்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக பவானிபூர் எம்.எல்.ஏ.வும்,வேளாண் அமைச்சராக இருக்கும் சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, பவானிபூர் இடைத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிடுவது உறுதியானது. இதற்கு முன் இருமுறை பவானிபூரில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வென்றுள்ளார். 

பவானிபூர் தொகுதியில் முதல்-மந்திரி மம்தாவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது. பா.ஜனதா சார்பில் பிரியங்கா திப்ரேவால் களமிறக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மம்தா பானர்ஜி போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் தொடங்கி, வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதி நடக்க உள்ளது. 

மம்தா பானர்ஜி மாலை 3 மணியளவில் மித்ரா நிறுவனப் பள்ளியில்  தன்னுடைய வாக்கை செலுத்தினார். வாக்குப்பதிவு நாள் முழுவதும் மந்தமாகவே நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு 7.57 சதவீதமும் காலை 11 மணிக்கு 21.73 சதவீதமும் மதியம் 1 மணிக்கு 35.97 சதவீதமுமாக இருந்தது. பிற்பகல் 3 மணியளவில் பவானிபூர் தொகுதியில் 48.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

Next Story