கொரோனாவால் பெற்றோரை இழந்த 845 குழந்தைகளுக்கு பிரதமர் நிதி திட்டத்தின் கீழ் உதவி


கொரோனாவால் பெற்றோரை இழந்த 845 குழந்தைகளுக்கு பிரதமர் நிதி திட்டத்தின் கீழ் உதவி
x
தினத்தந்தி 6 Oct 2021 10:55 PM GMT (Updated: 6 Oct 2021 10:55 PM GMT)

கொரோனாவால் பெற்றோரை இழந்த 845 குழந்தைகள் பிரதமர் நிதி திட்டத்தின் கீழ் உதவி பெற தேர்வு பெற்றுள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா கோரத்தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அனாதையாகிற பரிதாப நிலை உருவானது. இந்த நிலையைத் தடுத்து அவர்களுக்கு வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிற விதத்தில் ‘பி.எம்.கேர்ஸ்’ என்று அழைக்கப்படுகிற பிரதமர் நிதி திட்டத்தின் கீழ் உதவி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்தின்கீழ் உதவி பெறுவதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகத்துக்கு 3,915 விண்ணப்பங்கள் சென்றன.

இவற்றை பரிசீலித்த அந்த அமைச்சகம், 845 குழந்தைகளின் விண்ணப்பங்களை ஏற்று, அவர்களுக்கு ‘பி.எம்.கேர்ஸ்’ நிதி திட்டத்தின்கீழ் உதவி செய்ய தேர்வு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுகிற பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரால் ரூ.10 லட்சம் வங்கியில் செலுத்தப்படுகிறது. அவர்களது 18 வயதில் இருந்து மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு 23 வயதாகிறபோது ரூ.10 லட்சம் ரொக்கமாக வழங்கப்படும்.

இந்த குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதை ரூ.4 ஆயிரமாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரிசபை முடிவு எடுத்தவுடன், உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இலவசக்கல்வி, இலவச சுகாதார காப்பீடு, கல்விக்கடன் வசதிகளும் வழங்கப்படுகிறது. கல்விக்கடனுக்கான வட்டியையும் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் இருந்து வழங்கி விடுவார்கள்.

இந்த திட்டம் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பாதுகாவலர்கள், தத்து பெற்றோரை இழந்தவர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story