மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு; உத்தவ் தாக்கரே சாமி தரிசனம்


மராட்டியத்தில் வழிபாட்டு தலங்கள் திறப்பு; உத்தவ் தாக்கரே சாமி தரிசனம்
x
தினத்தந்தி 7 Oct 2021 8:09 PM GMT (Updated: 7 Oct 2021 8:09 PM GMT)

மராட்டியத்தில் 6 மாதத்திற்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மும்பா தேவி கோவிலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

வழிபாட்டு தலங்கள் திறப்பு

மராட்டியத்தில் கொரோனா பரவலை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து நவம்பர் மாதம் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் 2-வது கொரோனா அலையால் கடந்த மார்ச் மாதம் மாநிலத்தில் மீண்டும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன.இதற்கிடையே மாநிலத்தில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. எனவே கோவில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதா போராட்டத்தில் ஈடுபட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரிக்கும் இடையே மோதல் வெடித்தது. எனினும் மாநில அரசு வழிபாட்டு தலங்களை திறக்காமல் இருந்தது. இந்தநிலையில் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு நேற்று மாநிலம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.

முதல்-மந்திரி தரிசனம்

முதல் நாளே முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது மனைவி ராஷ்மி தாக்கரே, மகன்கள் ஆதித்ய தாக்கரே, தேஜஸ் தாக்கரே ஆகியோருடன் மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற மும்பா தேவி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். உத்தவ் தாக்கரே காலை 8.45 மணியளவில் கோவிலுக்கு வந்தார். அவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். சுமார் ½ மணி நேரம் அவர் கோவிலில் தரிசனம் செய்தார். உத்தவ் தாக்கரேவுடன் மேயர் கிஷோரி பெட்னேகரும் சாமி தரிசனம் செய்தார்.சாமி தரிசனத்தை முடித்த பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார். மேலும் அவர் பொதுமக்கள் அனைவரும் வழிபாட்டு தலங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.இதேபோல கொரோனா வைரசை முற்றிலுமாக அழிக்குமாறு மும்பா தேவியிடம் வேண்டிக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

பக்தர்கள் உற்சாகம்

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதையொட்டி மும்பையில் உள்ள கோவில்களில் காலை முதலே பக்தர்கள் உற்சாகமாக வந்து சாமி தரிசனம் செய்ததை காண முடிந்தது. பெண்கள் நவராத்திரியையொட்டி பாரம்பரிய ஆடை அணிந்து கோவில்களுக்கு வந்து இருந்தனர்.இதேபோல மசூதிகளில் தொழுகையும், கிறிஸ்தவ ஆலயங்களில் பிரார்த்தனையும் நடந்தது.

தானே, பால்கர் மற்றும் பிற பகுதிகளிலும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. தானே மெயின் மார்க்கெட்டில் உள்ள கோபினேஷ்வர் கோவில், அம்பர்நாத் சிவன் கோவில், பால்கர் மாவட்டம் தகானுவில் உள்ள மகாலெட்சுமி கோவில், வசாய் வஜ்ரேஷ்வரி கோவிலும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டு இருந்தது.

ஷீரடி சாய்பாபா கோவில்

புனேயில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். மேலும் பிரசித்தி பெற்ற பண்டர்பூர் விட்டல்வாடி கோவிலிலும் அதிக பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். ஷீரடி சாய்பாபா கோவிலில் ஆன்லைன் பாஸ் விண்ணப்பித்து இருந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இங்கு தினந்தோறும் 15 ஆயிரம் பேருக்கு ஆன்லைன் பாஸ் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.இதேபோல கோலாப்பூர் மகாலெட்சுமி கோவில் கருவறைக்குள் ஆன்லைன் பாஸ்க்கு விண்ணப்பித்து இருந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

வியாபாரிகள் மகிழ்ச்சி

வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதற்கு கோவில்கள், ஆலயங்கள் வெளியே பூ உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் செய்து வரும் சிறுவியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து தானே கணேஷ் கோவில் வெளியில் பூ வியாபாரம் செய்யும் சப்னா மாலி கூறுகையில், "கோவில்களை திறந்து இருப்பது நல்லது. அல்லது நாங்கள் வாழ்க்கையை நடத்துவது மிகவும் சிரமம் ஆகி இருக்கும்" என்றார்.


Next Story