புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை


புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்; தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை
x
தினத்தந்தி 11 Oct 2021 4:48 AM GMT (Updated: 11 Oct 2021 4:48 AM GMT)

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் குளறுபடிகளை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக தொகுதி சீரமைப்பில் பல குளறுபடிகள் உள்ளன. சுழற்சி முறையில் தேர்வு செய்வதில் குறைபாடுகள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மழை மற்றும் பண்டிகை காலங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசை கண்டித்தும், மாநில தேர்தல் ஆணையரை நீக்கக்கோரியும் இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,      விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன.

இதற்காக காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் நகரின் முக்கிய வீதிகளில் வியாபாரிகளை சந்தித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர். மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம், ஆட்டோ, டெம்போ ஒட்டுனர்கள் சங்கம், தொழிற்சாலை நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரினர்.

இதனை முன்னிட்டு தனியார் பஸ்கள், ஆட்டோ, டெம்போக்கள் இன்று ஓடாது. வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். புதுச்சேரியில் தனியார் பஸ்களே அதிக அளவில் உள்ளன. அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துதுறை அதிகாரி ஒருவர் கூறும்போது, புதுச்சேரியில் இன்று அரசு பஸ்கள் பலத்த பாதுகாப்புடன் இயக்கப்படும் என்றார்.  தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பாரதி கண்ணன் கூறும்போது, புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அரசியல் கட்சியினர் ஆதரவு கேட்டுள்ளனர். எனவே இன்று மாலை 6 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது என்றார்.  இதனால், சாலைகள் வெறிச்சோடி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  குறைந்த அளவிலேயே வாகனங்களும் இயங்கி வருகின்றன.




Next Story