லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்


லகிம்பூர் வன்முறை  குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும்; ராகுல் காந்தி டுவிட்
x
தினத்தந்தி 13 Oct 2021 12:35 PM GMT (Updated: 13 Oct 2021 12:35 PM GMT)

லகிம்பூர் வன்முறை குறித்து நியாயமான நீதி விசாரணை வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

உத்திரபிரதேசம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மத்திய மந்திரி அஜய்ஸ் மிஸ்ராவின் மகன் அஷிஸ் மிஸ்ரா சென்ற கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் 2 விவசாயிகள் பலியான நிலையில், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் இரு விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர். 

இந்த நிலையில்,  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரியங்கா காந்தி, ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத் மற்றும் கே.சி வேணுகோபால் ஆகியோர் இன்று காலை நேரில் சந்தித்தனர். அப்போது அவர்கள், லகிம்பூர் விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மத்திய மந்திரி பதவியில் இருந்து அஜய் மிஸ்ராவை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மனு அளித்தனர். 

இதைத்தொடர்ந்து தனது டுவிட்டரில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது;- “குற்றம் நடந்த பிறகு அரசாங்கமும் நிர்வாகமும் அநீதி இழைக்க முற்படும்போது நாம் நம்முடைய உரிமைக்குரலை எழுப்ப வேண்டும். லகிம்பூர் அநீதி வழக்கில் நமக்கு இரண்டு கோரிக்கைகள் உள்ளன. ஒன்று சரியான நீதி விசாரணை, மற்றொன்று மத்திய உள்துறை இணையமைச்சரின் உடனடி பதவி நீக்கம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” எனப்பதிவிட்டுள்ளார். 


Next Story