ஷாருக்கான்-தாயாருடன் வீடியோ காலில் பேசிய ஆர்யன் கான்


ஷாருக்கான்-தாயாருடன் வீடியோ காலில் பேசிய ஆர்யன் கான்
x
தினத்தந்தி 15 Oct 2021 9:53 AM GMT (Updated: 15 Oct 2021 9:53 AM GMT)

சிறை நிர்வாகத்தின் தகவல்படி இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பு சிறைக்காவலர் முன்னிலையில் இந்த வீடியோ கால் உரையாடல் நடந்தது.

மும்பை

போதைப்பொருள் விவகாரத்தில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை மும்பை நீதிமன்றத்தில்  நடைபெற்றது.

இந்த விசாரணையில் வாதிட்ட போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், காந்தி, புத்தரின் தேசத்தில், போதைப்பொருள் பயன்பாடு இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதிப்பதாக தெரிவித்தார்.

இவ்விவகாரத்தில் உள்ள சர்வதேச தொடர்புகளை கண்டுபிடிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளதாகவும், தற்போதைய நிலையில் ஜாமீன் தரக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, ஜாமீன் மனு மீதான உத்தரவு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்யன் கான் வியாழக்கிழமை பொது சிறைச்சாலைக்கு  மாற்றப்பட்டார். அங்கு அவர் இரவு முழுவதும் அமைதியற்றவராக இருந்தார்.அவர் இரவு முழுவதும் தூங்கவில்லை. ஆர்யனின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்

ஆர்யன் கான் தனது தந்தை ஷாருக்கான் மற்றும் தாய் வுரி கானுடன் மும்பையின் ஆர்தர் சாலை சிறையில் இருந்து வீடியோ அழைப்பு மூலம் பேசினார் என்று சிறை அதிகாரிகள் உறுதி செய்தனர்.  இந்த உரையாடலின் போது ஆர்யன் கான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். சிறை நிர்வாகத்தின் தகவல்படி இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பு சிறைக்காவலர் முன்னிலையில் இந்த உரையாடல் நடந்தது.

ஆர்தர் சாலை சிறை நிர்வாகத்தில் கைதிகள் தங்கள் குடும்பத்தினர் அல்லது வழக்கறிஞர்களுடன் தொடர்பு கொள்ள சுமார் 11 ஸ்மார்ட்போன்கள் உள்ளன. ஒவ்வொரு அழைப்பிற்கும் 10 நிமிடங்கள் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையும் அதிகபட்சம் இரண்டு முறையும் அனுமதிக்கப்படுகிறது. கொரோனாநெறிமுறையின்படி, சிறையில் உள்ள கைதிகளைப் பார்ப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

Next Story