மோடி அரசுக்கு தேசத்தை காக்கும் திறன் இல்லை- ராகுல் காந்தி பாய்ச்சல்


மோடி அரசுக்கு தேசத்தை காக்கும் திறன் இல்லை- ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 14 Nov 2021 5:35 AM GMT (Updated: 14 Nov 2021 6:56 AM GMT)

மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, மனைவி, மகன், 4 வீரர்கள் என 7 பேர் பலியாகினர்.

புதுடெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மியான்மர் நாட்டின் எல்லையை ஒட்டிய பகுதியான சூராசந்த்பூரில் நேற்று  அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  கர்னல் விப்லாவ் திரிபாதி.  அவரது மனைவி அனுஜா, 6 வயது மகன் அபீர் மற்றும் 4 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

மேலும் சில வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.  இந்த சம்பவம், அந்த மாநிலத்தையே உலுக்கி உள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள், பிரிபாக் என்று அழைக்கப்படுகிற மக்கள் புரட்சிகர கட்சியை சேர்ந்தவர்கள், இந்த அமைப்பினர் தனி மாநிலம் கோரி ஆயுதப்போராட்டம் நடத்தி வருபவர்கள் ஆவார்கள்.  பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த நிலையில், மணிப்பூரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பிரதமர் மோடியால் இந்த தேசத்தை பாதுகாக்க முடியாது என்பதை காட்டுகிறது என ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி இது குறித்து கூறுகையில்,  மணிப்பூரில் ராணுவ வாகன அணி வகுப்பு மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், பிரதமர் மோடியால் இந்த தேசத்தை பாதுகாக்க முடியாது என்பதை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. 

 உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  உங்களின் தியாகத்தை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும்” எனப்பதிவிட்டுள்ளார். 


Next Story