புதுச்சேரியில் தடுப்பூசி பணிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த மத்திய அரசு அறிவுரை...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Nov 2021 12:24 AM GMT (Updated: 23 Nov 2021 12:24 AM GMT)

மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிரான ஒரே வலிமையான ஆயுதமாக தடுப்பூசிகள் மட்டுமே களத்தில் உள்ளன. எனவே 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை இலக்காக வைத்து மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி மாநிலங்களும் துரிதமாக தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயனாளிகள் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த பணிகளில் வேகத்தடையாக சில மாநிலங்கள் உள்ளன. இதில் முக்கியமாக மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் உள்ளன.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 82 சதவீதம் (முதல் டோஸ்) மற்றும் 43 சதவீதம் (2-வது டோஸ்) தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. ஆனால் புதுச்சேரியில் 66 சதவீதம் மற்றும் 39 சதவீதம் அளவிலேயே முறையே முதல் மற்றும் 2-வது டோஸ் போடப்பட்டு இருக்கிறது.

இதைப்போல நாகாலந்தில் 49 மற்றும் 36 சதவீதமும், மேகாலயாவில் 57 மற்றும் 38 சதவீதமும், மணிப்பூரில் 54 மற்றும் 36 சதவீதமும் மட்டுமே போடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு குறைவாக தடுப்பூசி போட்டுள்ள இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துவது குறித்து இந்த மாநிலங்களின் சுகாதார செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மன்சுக் மாண்டவியா, “ கொரோனா தொற்றுக்கு எதிரான மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் தடுப்பூசி ஆகும். எனவே இதை அனைத்து பயனாளிகளுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நம்பிக்கை சார்ந்த அமைப்புகள், மத தலைவர்கள், சமூகத்தில் செல்வாக்கு மிகுந்தவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் பங்கேற்க செய்ய வேண்டும். தடுப்பூசி பணிகளில் நாம் கடைசி சுற்றில் இருக்கிறோம். எனவே இந்த பணிகளின் வேகத்தை அதிகரித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை பரவலாக்க வேண்டும். இதற்காக தீவிர பிரசாரங்களை மேற்கொள்ள வேணடும்.

நாட்டில் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு இல்லாமல் எந்த தகுதியான குடிமகனும் இல்லை என்ற நிலையை கூட்டாக உறுதி செய்வோம். இதில் உள்ள தயக்கம், தவறான தகவல், மூடநம்பிக்கை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.

இதற்காக அனைத்து அரசு அதிகாரிகளையும் வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை முகாமுக்கு அழைத்து வர வேண்டும். சமீபத்தில் அருணாசல பிரதேசத்துக்கு சென்றிருந்தபோது, அங்குள்ள வீடுகளில் ‘முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட வீடு’ என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்தேன். இதுபோன்ற புதுமையான வழிகளை பின்பற்றலாம்.

மேலும் கொரோனா தடுப்பூசிக்கான நல்லெண்ண தூதுவர்களாக குழந்தைகள், மாணவர்களை பயன்படுத்தலாம். இவர்கள் மூலம் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் உள்ள மூத்தவர்கள் மற்றும் பயனாளிகளிடம் உத்வேகத்தை ஏற்படுத்தலாம். 

ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட வாரியாக விரிவான திட்டங்களை தயாரிக்கவும், போதுமான எண்ணிக்கையிலான குழுக்களை ஏற்படுத்தவும், குறைந்த செயல்பாடு கொண்ட மாவட்டங்களின் தினசரி முன்னேற்றத்தை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யவும் வேண்டும்.

தடுப்பூசி போடுவதில் மக்களிடையே இருக்கும் தயக்கத்தை போக்கும் வகையில் புதுமையான வகையில் வீடியோ பதிவுகளை உருவாக்கி சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிட வேண்டும் என்று மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார்.

Next Story