அக்டோபர் மாதத்தில் கடும் சரிவை கண்ட கார்களின் விற்பனை


அக்டோபர் மாதத்தில் கடும் சரிவை கண்ட கார்களின் விற்பனை
x
தினத்தந்தி 1 Dec 2021 6:08 PM IST (Updated: 1 Dec 2021 6:08 PM IST)
t-max-icont-min-icon

கார்களின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன.

மும்பை,

மாருதி சுசூகி, ஹூண்டாய், கியா இந்தியா, ஹோண்டா மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார்கள் விற்பனை சரிவை கண்டுள்ளது. கார்களின் விற்பனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளன.

அதே நேரம், டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா, நிசான் மற்றும் ஸ்கோடா ஆகிய நிறுவனங்கள் விற்பனையில் ஏற்றத்தை சந்தித்துள்ளன.

கார் உற்பத்திக்கான மின்சாதன மற்றும் மின்னணு பொருட்கள் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்பின் காரணமாக கார் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

குறைக்கடத்திகள் பற்றாக்குறை காரணமாக கார் தயாரிப்பு குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .கார் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர்கள் எனப்படும் குறைக்கடத்திகள் காரில் இருக்கும் நவீன வசதிகளான தொடு திரை உணர்தல், பாதுகாப்பு அம்சங்கள், எரிசக்தி மேலாண்மை மற்றும் வாகனத்தின் கட்டுப்பாடு போன்றவற்றில் உள்ளன.

மாருதி சுசூகி நிறுவனம் அக்டோபர் 2020 இல் 1,72,862 கார்கள் விற்பனை செய்துள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில்  1,17,013 கார்கள் விற்பனை ஆகி உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம், மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களின் விற்பனை 32 சதவீதம் சரிந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஸ்விஃப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர் மாடல் கார்களின் விற்பனை அதிகம் சரிவை சந்தித்துள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்-கிராஸ் மற்றும் எர்டிகா மாடல் கார்கள் 7 சதவீதம் அதிகமாக விற்பனை ஆகி உள்ளன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனை அளவை, இந்த ஆண்டு அக்டோபர் மாத விற்பனை செய்யப்பட்டுள்ள அளவுடன் ஒப்பிடுகையில்,

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவத்தின் கார்களின் விற்பனை 35 சதவீதம் சரிந்துள்ளது.

கியா இந்தியா  நிறுவத்தின் கார்கள் விற்பனை 22 சதவீதம் சரிந்துள்ளது.
 
ஹோண்டா நிறுவத்தின் கார்கள் விற்பனை 25 சதவீதம் சரிந்துள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவத்தின் கார்கள் விற்பனை 24 சதவீதம் சரிந்துள்ளது.

இந்திய நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா மோட்டார்ஸ்  நிறுவத்தின் கார்கள் விற்பனை 8 சதவீதம் ஏற்றத்தை கண்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கார்கள் விற்பனையில் 44 சதவீதம் ஏற்றத்தை கண்டுள்ளது

நிசான் இந்தியா மற்றும் ஸ்கோடா நிறுவனங்களும்  கார்கள் விற்பனையில் ஏற்றத்தை கண்டுள்ளன.

மேலும், கார் விற்பனையுடன் சேர்ந்து கடந்த அக்டோபர் மாதத்தில் இருசக்கர வாகன விற்பனையும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story