மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு: விவசாய சங்கங்கள்


மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு: விவசாய சங்கங்கள்
x
தினத்தந்தி 4 Dec 2021 1:02 PM GMT (Updated: 4 Dec 2021 1:02 PM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினர் 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக  தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

 விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய அரசு, வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றுள்ளது. எனினும், குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்த விவசாய அமைப்புகள், போராட்டம் கைவிடப்படாது என அறிவித்தனர். 

இந்த நிலையில்,  குறைந்தபட்ச ஆதார விலையை அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட 5 பேர் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கத்தினர் அமைத்துள்ளனர். 

பல்பீர் சிங் ராஜ்வால், சிவ்குமார் கக்கா, குர்னாம் சிங் சருனி, யுத்வீர் சிங், அசோக் தவாலே உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள இந்தக் குழு மத்திய அரசுடன் முறையாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக டிசமபர் 7ஆம் தேதி ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு பேசியதாகவும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றால் போராட்டத்தை முடித்துக்கொள்ள தயாராக இருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story