எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு அதிகரிப்பு; பஞ்சாப் அரசு எதிர்ப்பு! சுப்ரீம் கோர்ட்டில் மனு!
எல்லைப் பாதுகாப்பு படையின் பிராந்திய அதிகார வரம்பை, இந்தியாவின் சர்வதேச எல்லை பகுதிகளில் 15 கிமீ முதல் 50 கிமீ வரை அதிகரிக்க மத்திய அரசு அறிவித்தது.
புதுடெல்லி,
சர்வதேச எல்லையோரம் உள்ள இந்திய மாநிலங்களின் குறிப்பட்ட தூரம் வரை மாநில அரசின் அனுமதியின்றி சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பஞ்சாப், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களில் எல்லையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிற்கு மாநில அரசின் அனுமதியின்றி எல்லைப்பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தவும், சந்தேகிக்கும் நபர்களை கைது செய்யவும் ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை மத்திய அரசு நீட்டித்தது. அதன்படி, மேற்குவங்காளம், பஞ்சாப், அசாம் ஆகிய 3 மாநிலங்களிலும் எல்லைப்பகுதியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிற்கு எல்லைப்பாதுகாப்பு படையினர் தங்கள் அதிகார வரம்பை செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து அக்டோபர் 11ம் தேதியன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘அசாம், மேற்கு வங்காளம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சர்வதேச எல்லையில் இருந்து, 50 கிமீ தொலைவில் எல்லைப் பாதுகாப்புப் படையின் பிராந்திய அதிகார வரம்பு அதிகரிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பின் மூலம், எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு தேடுதல், கைப்பற்றுதல் மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பை நீட்டித்ததற்கு சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், பஞ்சாப் அரசு இவ்விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக 28 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர், அட்டர்னி ஜெனரல் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மத்திய அரசு தன் தரப்பு வாதங்களை முன்வைத்த பின் வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் பஞ்சாப் மாநில அரசு அளித்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது,
‘எல்லைப் பாதுகாப்புப் படையின் (பி எஸ் எப்), பிராந்திய அதிகார வரம்பை நீட்டிப்பு செய்திருப்பதன் மூலம், மாநிலங்களின் அரசியலமைப்பு அதிகார வரம்பில் மத்திய அரசு ஊடுருவுகிறது. இந்த அறிவிப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும்.
பஞ்சாப் மாநிலத்தில், இந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டி இருக்கும் 80 சதவீத எல்லைப்புற மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்கள் ஆகியன 50 கி.மீ வரம்புக்குள் வந்துவிடும்.
தற்போதைய நடைமுறைப்படி, 1969ம் ஆண்டு முதல் பஞ்சாபில் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு, சர்வதேச எல்லையில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.
ஜம்மு காஷ்மீர், லடாக், குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் சர்வதேச எல்லைப் பகுதிகளிலிருந்து பஞ்சாபின் புவியியல் முற்றிலும் வேறுபட்டவை.பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், மக்கள் தொகை அடர்த்தியாக இருப்பதாகவும், அதே சமயம் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில எல்லைப் பகுதிகளில்ம் உப்பு சதுப்பு நிலங்கள் மற்றும் பாலைவன நிலங்கள் தான் உள்ளன.
பஞ்சாப் மாநிலத்தின் பதான்கோட், குர்தாஸ்பூர், அமிர்தசரஸ், பெரோஸ்பூர், பஸ்லிகா உள்ளிட்ட எல்லை மாவட்டங்கள் மிகவும் வளமான, அதிக மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ஆகும்.
50 கிமீ எல்லைக்கு அதிகார வரம்பை நீட்டிப்பதை எந்த காரணமும் நியாயப்படுத்த முடியாது.மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும்.
மேலும், எல்லையோரங்களில் உள்ள தங்கள் நிலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்ய முள்வேலியைக் கடக்க வேண்டிய கஷ்டத்திற்கு தள்ளப்படுவார்கள்.’
இவ்வாறு பாஞ்சாப் மாநில அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லை பாதுகாப்பு படை அதிகார வரம்பு நீட்டிப்பு தொடர்பாக மாநில அரசிடம் கலந்து ஆலோசிக்கவில்லை எனவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது இது எனவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சகத்தின் இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறுகையில், “இது எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிராக சிறந்த மற்றும் பயனுள்ள நடவடிக்கையை விளைவிப்பதாகக் கூறினார். மேலும், மத்தியப் படை, மாநில காவல்துறையின் ஒத்துழைப்புடன் செயல்பட வழிவகுக்கும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Related Tags :
Next Story