உ.பி.யில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் விருப்பம்: தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 30 Dec 2021 8:59 PM GMT (Updated: 30 Dec 2021 8:59 PM GMT)

உ.பி.யில் திட்டமிட்டபடி தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் விரும்புவதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா தெரிவித்தார்.

லக்னோ, 

புத்தாண்டு தொடக்கத்தில் உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியும், மணிப்பூரில் முதல்-மந்திரி பீரேன் சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியும், கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சியும், உத்தரகாண்டில் முதல்-மந்திரி புஷ்கர்சிங் தமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சியும், பஞ்சாப்பில் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியும் நடக்கிறது.

இந்த மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து வருகிறது.

அலகாபாத் ஐகோர்ட்டு யோசனை

இதற்கிடையே ஒமைக்ரான் வைரசால் கொரோனாவின் 3-வது அலை வரும் வாய்ப்பு உள்ளதால் உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலை ஒத்திபோட மத்திய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட்டு கடந்த 23-ந் தேதி யோசனை கூறியது.

இதுபற்றிகருத்து தெரிவித்த தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா, உத்தரபிரதேசத்துக்கு நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்து உரிய முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.

உ.பி.யில் தலைமை தேர்தல் கமிஷனர்

அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுஷில் சந்திரா 3 நாள் பயணம் மேற்கொண்டார். அவர் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், மாநில அரசு உயர் அதிகாரிகளையும், மாவட்ட அளவிலான அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து லக்னோவில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி சட்டசபை தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்று விரும்புகின்றன.

ஒமைக்ரான் தாக்கம் இல்லை

வாக்குப்பதிவு அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடப்படும். தகுதி வாய்ந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்படும்.

மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதை அரசு விரைவுபடுத்த வேண்டும்.

86 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர், 49 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு விட்டனர் என என்னிடம் தெரிவித்தார்கள். இன்னும் 20 நாளில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் என எங்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரசால் ஏற்பட்டுள்ள நிலைமை ஆய்வு செய்யப்பட்டது. இங்கு அந்த தொற்றால் பெரிய அளவில் தாக்கம் இல்லை. 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, அதிலும் 3 பேர் குணம் அடைந்துவிட்டனர்.

வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தனி மனித இடைவெளியை பராமரிக்க ஏற்ற விதத்தில் கூடுதலாக 11 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும்.முன்பு 1,500 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி ஏற்படுத்தப்பட்டது. கொரோனா பெருந்தொற்றை கவனத்தில் கொண்டு 1,250 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்படும். 11 ஆயிரம் வாக்குச்சாவடிகளை கூடுதலாக அமைப்பதால் மாநிலத்தில் மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 351 வாக்குச்சாவடிகள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனால் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

Next Story