தேசிய அரசியலை குறிவைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிடும் திரிணாமுல் காங்கிரஸ்


தேசிய அரசியலை குறிவைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிடும் திரிணாமுல் காங்கிரஸ்
x
தினத்தந்தி 1 Jan 2022 4:53 PM GMT (Updated: 1 Jan 2022 4:53 PM GMT)

திரிணாமுல் காங்கிரஸ் தனது 24-வது ஆண்டு நிறுவன தின வேளையில் தேசிய அரசியலை குறிவைத்து நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரசின் தோற்றம்

மேற்கு வங்காளத்தில் காங்கிரசில் இருந்து விலகிய மம்தா பானர்ஜி, கடந்த 1998-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நிறுவினர். மாநிலத்தில் கம்யூனிஸ்டு ஆட்சியை அகற்றுவதுதான் அவரது பிரதான நோக்கமாக இருந்தது.

2001, 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல்களில் அந்த முயற்சியில் மம்தா தோல்வியுற்றபோதும் 2011-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றார்.

தற்போது மேற்கு வங்காளத்தின் அசைக்கமுடியாத ஆளுங்கட்சியாக வலுப்பெற்றிருக்கிறார்.

தேசிய அரசியலை குறிவைத்து...

இந்நிலையில் 24-வது ஆண்டு நிறுவன தினத்தை கொண்டாடிய திரிணாமுல் காங்கிரஸ், தேசிய அரசியலை குறிவைப்பது அதன் செயல்பாடுகளில் இருந்து தெரியவந்திருக்கிறது. தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்று தாங்கள்தான் என்று நிறுவவும் திரிணாமுல் முயல்கிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரசால் போராட முடியவில்லை என்று நேரடியாகவே குற்றம்சாட்டிய அக்கட்சி, மேற்கு வங்காளத்தை தாண்டி தனது இருப்பை விரிவுபடுத்த முயல்கிறது.

கடந்த 6 மாதங்களில் திரிணாமுல் காங்கிரசின் கிளைகள் கோவா, அரியானா, திரிபுரா மற்றும் மேகாலயாவில் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் மேகாலயாவில் பிரதான எதிர்க்கட்சியாகவும் உருவெடுத்துள்ளது.

அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்?

திரிணாமுல் காங்கிரசை தேசிய கட்சியாகவும், பிரதமர் மோடிக்கு மாற்று நபராக மம்தாவையும் முன்னிறுத்தும் முயற்சிகளில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். வருகிற 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தேசிய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த திட்டமிடுகின்றனர். அதற்கு, தங்கள் பக்கமுள்ள பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் உதவுவார் என்று நம்புகின்றனர். நாட்டின் அனைத்து பகுதி மக்களையும் ஈர்க்கும்வகையில் கட்சியின் பெயரை அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்று மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பா.ஜ.க., காங்கிரஸ் விமர்சனம்

ஆனால் திரிணாமுல் காங்கிரசின் தேசிய கனவு பலிக்காது என்று பா.ஜ.க.வும், காங்கிரசும் ஒருசேர கூறிவருகின்றன. அது சரியா தவறா என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துவிடும்.


Next Story