பூடான் எல்லைக்குள் சீனா அத்துமீறல்: நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி வலியுறுத்தல்


பூடான் எல்லைக்குள் சீனா அத்துமீறல்: நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2022 12:20 AM GMT (Updated: 15 Jan 2022 12:20 AM GMT)

பூடான் எல்லைக்குள் சட்டவிரோதமாக கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.

புதுடெல்லி,

இந்தியாவில் கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020-ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய படைகள் தடுத்து நிறுத்தினர்.  இதையடுத்து அங்கு இந்தியாவும், சீனாவும் ஆயிரக்கணக்கில் படைகளை குவித்து கண்காணிப்பு பணிகளை பலப்படுத்தின. இதனால் எல்லையில் கடுமையான பதற்றம் தொடர்ந்து வருகிறது. 

இதை தணிக்கும் நடவடிக்கையாக சீனப்பகுதியில் உள்ள  சுசுல்-மோல்டோ எல்லையில் இந்தியா சீனா ராணுவ அதிகாரிகள் தரப்பில் 14-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பூட்டானுக்குள் சட்டவிரோதமாக இரண்டு கிராமங்களை சீனா கட்டமைத்து வருவது குறித்து செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  டோக்லாம் பள்ளித்தாக்கு பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம் ஒரு முழு அளவிலான கிராமத்தை அது உருவாக்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.  

இந்த நிலையில், இந்த செயற்கை கோள் புகைப்படங்களை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அவரது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மோடி அரசு முதலில் நமது நிலத்தை சீனாவிடம் ஒப்படைத்தது, தற்போது அதனை மீட்கும் நடவடிக்கையை எடுக்காத செயலற்ற தன்மையால் நமது நெருங்கிய அண்டை நாடுகளையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. உங்களுக்காக நீங்கள் நிற்கவில்லை என்றால், உங்கள் நண்பர்களுக்காக எப்படி நிற்பீர்கள்?. இவ்வாறு டுவிட்டர் பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Next Story