பீகாரில் 5 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட டாக்டர்..!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 18 Jan 2022 10:06 PM GMT (Updated: 2022-01-19T03:36:35+05:30)

பீகாரில் டாக்டர் ஒருவர் 5 முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாட்னா, 

பீகாரில் டாக்டர் ஒருவர் 5 முறை தடுப்பூசி செலுத்தியிருப்பதாக பரபரப்பு ஏற்பட்டிருப்பது சர்ச்சையாகி வருகிறது. அறுவை சிகிச்சை மருத்துவரான அவரது பெயர் விபா குமாரி சிங். அவர் 5 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அரசு ஆவண பதிவுகளை ஆய்வு செய்தபோது தெரியவந்துள்ளது. 

தற்போது அரசு அனுமதித்துள்ள பூஸ்டர் டோஸ் வரை 3 தடுப்பூசிகளை முறையாக போட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் மற்ற 2 முறை தனது பான் கார்டு தகவல்களை கொண்டு வேறு யாரோ தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் விபா குமாரி சிங கூறி உள்ளார். 

கோ-வின் இணையதள ஆவணப்படி அவர் முதல் தவணை தடுப்பூசியை கடந்த ஆண்டு ஜனவரி 28-ந்தேதியும், அடுத்த மார்ச் மாதம் 2-வது தவணையும் செலுத்தியுள்ளார்.

அரசு ஆவணப்படி அவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி பான் கார்டு கொண்டு தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும், 4-வது முறையாக கடந்த ஜூன் 17-ந்தேதியும், இந்த மாதம் 13-ந்தேதி 5-வது முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாட்னா மாவட்ட நீதிபதி இதுகுறித்த விசாரணையை தொடங்கி உள்ளார்.

முன்னதாக பீகாரை சேர்ந்த 84 வயது முதியவர், 12-வது முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தபோது பிடிபட்டார். அவர் தடுப்பூசியால் தனது முதுகுவலி உள்ளிட்ட உடல்நல கோளாறுகள் சீரடைந்ததால் மீண்டும் மீண்டும் வேறுவேறு அடையாள அட்டைகளை காண்பித்து 11 முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story