பாஜக இந்துத்துவா அல்ல - உத்தவ் தாக்கரே சாடல்


Image Courtesy: Mumbai Mirror
x
Image Courtesy: Mumbai Mirror
தினத்தந்தி 24 Jan 2022 5:58 AM GMT (Updated: 24 Jan 2022 5:58 AM GMT)

பாஜகவுடன் கூட்டணி வைத்து 25 ஆண்டுகள் வீணாகிவிட்டதாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை,

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் பிறந்தநாளையொட்டி கட்சி தொண்டர்களிடம் மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே காணொலி காட்சி மூலம் உரையாடினார். 

அப்போது பேசிய உத்தவ் தாக்கரே, பாரதிய ஜனதா கட்சியுடனான அரசியல் கூட்டணியின் காரணமாக 25 ஆண்டுகள் வீணாகிவிட்டது’ என்றார்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு உத்தவ் தாக்கரே ஓய்வில் இருந்து வந்த நிலையில் அவரை பாஜக தொடர்ந்து தாக்கி பேசிவந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “விரைவில் நான் மராட்டியத்தில் சுற்றுப்பயணம் செய்வேன். என் உடல்நிலை குறித்து கவலைப்படும் எதிரணியினருக்கு காவியின் பலம் என்ன என்பதை காட்டுவேன். மத்தியில் ஒரு காபந்து அரசாங்கம் இருப்பதைப் போல, இங்கு காபந்து எதிர்க்கட்சி உள்ளது, மேலும் அது தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும்” என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

“நாங்கள் இந்துத்துவாவை கைவிட மாட்டோம். பாஜகவுடனான கூட்டணியை முறித்துவிட்டோம் ஆனால் இந்துத்துவாவுடன் அல்ல. பாஜக இந்துத்துவா அல்ல. நீங்கள் நாட்டை பார்த்துக்கொள்ளுங்கள் மராட்டியத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பால் தாக்கரே பாஜகவிடம் கூறினார். ஆனால், பாஜக தான் நம்மை ஏமாற்றினர். அவர்கள் நம்மை ஒட்டுமொத்தமாக அழிக்க முயற்சித்தனர். நாம் அவர்களை (பாஜக) பல ஆண்டுகளாக வளர்த்தோம். ஆனால், அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் ‘பயன்படுத்திய பின் வீசி எறியும்’ கொள்கையை அவர்கள் பின்பற்றினர்’ என்றார்.

Next Story