வாகன நிறுத்தும் இடங்கள் நாளை, நாளை மறுநாள் மூடல்: டெல்லி மெட்ரோ நிர்வாகம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 9:34 AM GMT (Updated: 24 Jan 2022 9:34 AM GMT)

குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி, 

நாட்டின் 73ஆவது குடியரசு தினம் நாளை மறு நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் மட்டும் சுமார் 27ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த ஆண்டு குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காத நிலையில், 2 மாதங்களுக்கு முன்பில் இருந்தே, டெல்லி காவல்துறை, மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

வாகனங்கள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் சோதனை நடத்தியதோடு, சந்தேகிக்கும் படியான நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்தோடு, ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 200 குழுக்கள் குடியரசு தின பாதுகாப்பில் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக சமூக வலைதளங்களிலும் சந்தேகத்திற்கு இடமான வகையில் வரும் பதிவுகள் குறித்து கண்காணிக்கப்படுகிறது.

இதனிடையே, நாடு முழுவதுமுள்ள விமான நிலையங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் உடமைகள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. விமான நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள், பயணிகள் அறை உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய்கள் கொண்டும், வெடிகுண்டு நிபுணர்கள் கொண்டும் சோதனை நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்தும் இடங்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. குடியரசு தின பாதுகாப்பு நடவடிக்கையாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலும் குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக, ஹுடா சிட்டி சென்டர் மற்றும் சமய்பூர் பட்லி இடையேயான லைன் 2 இல் டெல்லி மெட்ரோ சேவைகள் ஜனவரி 26 அன்று குறைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) இன்று தெரிவித்துள்ளது.

மத்திய செயலகம் மற்றும் உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறுதல் ஆகியவை சேவைகள் தொடங்குவதில் இருந்து மதியம் வரை மூடப்படும். சென்ட்ரல் செக்ரடேரியட் ஸ்டேஷன் லைன் 2 மற்றும் லைன் 6 க்கு இடையில் பயணிகளின் பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். படேல் சௌக் மற்றும் லோக் கல்யாண் மார்க் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதை மூடப்பட்டிருக்கும்.

அனைத்து மெட்ரோ வாகன நிறுத்துமிடங்களும் ஜனவரி 25 ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி மதியம் 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story