கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 166 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - மந்திரிசபை முடிவு


கர்நாடகத்தில் நன்னடத்தை அடிப்படையில் 166 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை - மந்திரிசபை முடிவு
x
தினத்தந்தி 27 Jan 2022 7:08 PM GMT (Updated: 27 Jan 2022 7:08 PM GMT)

கர்நாடக சிறைகளில் உள்ள 166 ஆயுள் தண்டனை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய மந்திரிசபை முடிவு செய்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

“கர்நாடகத்தில் வித்யா விகஸ் திட்டத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சீருடைகள் வாங்க ரூ.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு சிறைகளில் உள்ள 166 ஆயுள் தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க ரூ.92 கோடி நிதி ஒதுக்கப்படும்.

கிராமப்புறங்களில் நில ஆவணங்களை தயார்படுத்த குட்டி விமானங்கள் மூலம் சர்வே நடத்த ரூ.287 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கால்நடைத்துறையில் புதிதாக 400 டாக்டர்களை நியமனம் செய்யப்படுவார்கள். 430 முதல் நிலை கல்லூரிகள், 14 பொறியியல் கல்லூரிகளில் ரூ.97 கோடியில் "ஸ்மார்ட்" வகுப்பறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.”

இவ்வாறு மந்திரி மாதுசாமி கூறினார்.

Next Story