போர் பதற்றம் எதிரொலி: உக்ரைனில் இருந்து இந்தியா வந்தடைந்த 242 பயணிகள்..!
உக்ரைனில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது.
புதுடெல்லி,
உக்ரைன் எல்லையில் படைகளை குவித்துள்ள ரஷியா, எந்த நேரத்திலும் அந்த நாட்டுடன் போரை தொடங்கும் என்ற பீதி ஏற்பட்டு உள்ளது. இதனால் உலக நாடுகள் தங்கள் குடிமக்களை உக்ரைனில் இருந்து வெளியேற அறிவுறுத்தி வருகின்றன.
அந்த வகையில் உக்ரைனில் தங்கியிருக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசும் கேட்டுக்கொண்டு உள்ளது. அத்துடன் அவர்கள் நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, உக்ரைனில் வாழும் இந்தியர்களை அழைத்து வர 22-ந் தேதி (நேற்று), 24 மற்றும் 26-ந் தேதிகளில் 3 விமானங்களை இயக்கப்போவதாக ஏர் இந்தியா அறிவித்தது.
அதன்படி முதல் விமானம் நேற்று டெல்லியில் இருந்து உக்ரைன் புறப்பட்டது. காலை 7.30 மணிக்கு கிளம்பிய விமானம், பிற்பகல் 3 மணியளவில் உக்ரைனில் தரையிறங்கியது. பின்னர் அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் 242 பயணிகளுடன் சிறப்பு விமானம் வந்தடைந்தது.
இதைப்போல வேறு சில விமான நிறுவனங்களும் இந்தியர்களை அழைத்து வருவதற்காக உக்ரைனுக்கு விமானங்களை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story