குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் பாஜக..2-வது நாளாக பேரணி நடத்திய பிரதமர் மோடி
முன்னதாக ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, பிறகு திறந்த ஜீப்பில் பயணம் செய்து வழிநெடுக நின்ற தொண்டர்களை பார்த்து கை அசைத்தவாறு சென்றார்.
அகமதாபாத்,
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பஞ்சாப்பை தவிர மீதமுள்ள 4 மாநிலங்களிலும் பா.ஜனதா அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்த வெற்றியை பா.ஜனதா தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். இந்த வெற்றியை பெற்று தந்ததற்காக பிரதமர் மோடியை பா.ஜனதா தலைவர்களும் புகழ்ந்துரைத்து வருகின்றனர்.
தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், நேற்று பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றார். பின்னர் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கமலம் பகுதியில் அமைந்துள்ள மாநில பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு அவர் பேரணியாக சென்றார். சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு திறந்த வாகனத்தில் சென்ற பிரதமர் மோடிக்கு வழிநெடுகிலும் திரளான தொண்டர்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். ‘மோடி, மோடி’ என அவர்கள் எழுப்பிய கோஷம் விண்ணை எட்டியது.
2-வது நாளாக பேரணி
இந்த நிலையில் 2-வது நாளாக இன்று பிரதமர் மோடி பேரணி நடத்தினார். காந்திநகரில் இன்று பேரணியாக பிரதமர் மோடி சென்றார். பிரதமரைக் காண கூடியிருந்த தொண்டர்களை பார்த்து உற்சாகமாக பிரதமர் மோடி கை அசைத்தார். முன்னதாக ராஜ்பவனில் இருந்து காரில் புறப்பட்ட பிரதமர் மோடி, பிறகு திறந்த ஜீப்பில் பயணம் செய்து வழிநெடுக நின்ற தொண்டர்களை பார்த்து கை அசத்தவாறு சென்றார். பிரதமர் மோடியுடன் குஜராத் முதல் மந்திரி புபேந்திர படேல் பயணித்தார்.
இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு இப்போதே ஆயத்தமாகும் வகையில் பிரதமர் மோடியின் வெற்றிப்பேரணி இருந்ததாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
Related Tags :
Next Story