பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவகாரம்: காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு முன்னாள் தலைவர் உள்பட 5 பேர் கைது
பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு முன்னாள் தலைவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு:
'பே-சி.எம்.' போஸ்டர்
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. இந்த நிலையில் பா.ஜனதா மந்திரிகள் சிலர் மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. கர்நாடக அரசை 40 சதவீத கமிஷன் அரசு என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பா.ஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு நூதன முறையில் பிரசாரம் செய்யப்பட்டது. அதாவது போஸ்டர்களில் 'கியூ.ஆர்.' கோடில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் படத்துடன் 'பே-சி.எம்.' என போஸ்டர்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
5 பேர் கைது
இதுகுறித்து விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது. மேலும் போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐகிரவுண்டு, சதாசிவநகர், சேஷாத்திரிபுரம், பாரதிநகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கும் பதிவாகி இருந்தது.
இந்த நிலையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாக கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சமூக வலைத்தள பிரிவு முன்னாள் தலைவர் பி.ஆர்.நாயுடு, காங்கிரஸ் தொண்டர்களான பவன், ககன் உள்பட 5 பேரை நேற்று காலை ஐகிரவுண்டு போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்று மதியம் அவர்கள் 5 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் போஸ்டர் ஒட்டிய விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.