8-வது சர்வதேச யோகா தினம்: 'யோகா, உலகளாவிய திருவிழாவாக மாறி இருக்கிறது' பிரதமர் மோடி பெருமிதம்
யோகா, உலகளாவிய திருவிழாவாக மாறி இருக்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
மைசூரு,
சர்வதேச யோகா தினம், 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
நேற்று 8-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம், மைசூரு அரண்மனை மைதானத்தில் நடந்தது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகா பயிற்சிகள் செய்தார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் கர்நாடக மாநில கவர்னர் தவர் சந்த் கெலாட், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத்திய மந்திரி சர்வானந்த சோனாவால் ஆகியோரும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.
உலகுக்கு அமைதி தரும் யோகா...
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது கூறியதாவது:-
யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. யோகாவில் இருந்து அமைதி தனி நபர்களுக்கு மட்டுமல்ல, சமூகத்துக்கும் அமைதி கிடைக்கிறது. யோகா, நாடுகளுக்கு அமைதியைத் தருகிறது. யோகா உலகுக்கு அமைதியைத் தருகிறது. யோகா நமது பிரபஞ்சத்துக்கு அமைதியைத் தருகிறது.
ஒட்டுமொத்த பிரபஞ்சமும் நமது உடலில் இருந்தும், ஆன்மாவில் இருந்தும்தான் தொடங்குகிறது. இந்த பிரபஞ்சம் நம்மில் இருந்துதான் தொடங்குகிறது.
உலக ஆரோக்கியத்துக்கு யோகா...
யோகா, நமக்குள் இருக்கும் எல்லாவற்றையும் நமக்கு உணர்த்துகிறது. விழிப்புணர்வை கட்டமைக்கிறது. இது சுய விழிப்புணர்வில் தொடங்கி உலகத்தைப்பற்றிய விழிப்புணர்வுக்கு செல்கிறது. நாம் நம்மைப்பற்றியும், இந்த உலகத்தைப்பற்றியும் அறிந்தால், நம்மிலும், உலகிலும் மாற்றப்பட வேண்டிய விஷயங்களைக் கண்டுபிடிக்க தொடங்குகிறோம்.
யோகா ஆற்றல், மைசூரு போன்ற இந்தியாவின் ஆன்மிக மையங்களால் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இது உலக ஆரோக்கியத்துக்கு வழிகாட்டுகிறது.
ஆரோக்கிய வாழ்க்கைக்கான நம்பிக்கை
இன்றைக்கு யோகா உலகளாவிய ஒத்துழைப்புக்கு அடிப்படையாகி கொண்டிருக்கிறது. மனித சமூகத்துக்கு அது ஆரோக்கிய வாழ்க்கைக்கான நம்பிக்கையை அளிக்கிறது.
யோகா வீடுகளுக்குள் இருந்து வெளியே வந்திருக்கிறது. இது உலகமெங்கும் பரவி இருக்கிறது. இது ஆன்மிக உணர்தல் மற்றும் இயற்கையான மற்றும் பகிரப்பட்ட நனவின் வெளிப்பாடு ஆகும். குறிப்பாக இதுவரை இல்லாத வகையில் வந்த கொரோனா தொற்று நோய் காலத்தில் அவ்வாறு இருந்தது.
உலகளாவிய திருவிழா
யோகா தற்போது உலகளாவிய திருவிழாவாக மாறி இருக்கிறது. யோகா, எந்தவொரு தனிப்பட்ட நபருக்கும் உடையது மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குரியது. எனவே இந்த ஆண்டு சர்வதேச யோகா தின பொருளாக, மனித குலத்துக்கான யோகா என்பது அமைந்துள்ளது.
யோகா வாழ்வின் ஒரு அங்கம் அல்ல. இது வாழ்வின் ஒரு முறையாக மாறி இருக்கிறது. யோகா ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு, இடத்துக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை.
யோகாவுடன் வாழ்வோம்...
நாம் இன்றைக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்துக்கு ஆளாகிறோம் என்பது பொருட்டல்ல, சில நிமிட தியானம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. நமது செயல்பாடுகளை அதிகரிக்கிறது. எனவே யோகாவை நாம் நமது கூடுதல் வேலையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. நாம் யோகா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். நாமும் யோகாவுடன் வாழவேண்டும். நாம் யோகாவை அடைய வேண்டும். நாம் யோகாவை பின்பற்ற வேண்டும். நாம் யோகாவுடன் வாழ தொடங்குகிறபோது, யோகா தினம் நமக்கு யோகா செய்வதற்கான ஊடகமாக மட்டுமல்ல, நமது ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதியைக் கொண்டாடும் ஊடகமாக மாறும்.
இன்று யோகாவுடன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை உணரவேண்டிய தருணம் ஆகும். இன்று நமது இளைஞர்கள் யோகா துறையில் புதிய யோசனைகளுடன், அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.