முழுஅடைப்பால் எதையும் சாதிக்க முடியாது-போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி


முழுஅடைப்பால் எதையும் சாதிக்க முடியாது-போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பேட்டி
x

போலீஸ் மந்திரி பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அசம்பாவித சம்பவங்கள்

சில கன்னட அமைப்புகள் பெங்களூருவில் நாளை மறுநாள் (நாளை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. முழுஅடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டங்கள் நடத்த எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. அது அவர்களின் உரிமை. மாநிலத்தின் நலன் கருதி போராட்டம் நடத்தலாம். ஆனால் அசம்பாவித சம்பவங்களுக்கு இடம் தரக்கூடாது. பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக்கூடாது. மக்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக்கூடாது. சட்டவிரோத செயல்கள் நடைபெறக்கூடாது.

பெங்களூருவில் முழு அடைப்பு நடத்தும்போது சிறிது ஆதங்கம் இருக்கும். மக்கள் நடமாட தொந்தரவு ஏற்படும். இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுள்ளோம். போலீஸ் துறை எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுக்கும். போலீசார் ஆலோசனை நடத்தி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

சாதிக்க முடியாத

முழு அடைப்பு போராட்டம் நடத்துவதால் பிரச்சினை தீர்ந்துவிடாது. தண்ணீரை திறக்கும்படி சொல்கிறார்கள். காவிரி ஆணையத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கும் வகையில் போராட்டம் நடத்துவதாக கூறுகிறார்கள். அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறது. நமது வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் நல்ல முறையில் வாதம் எடுத்து வைக்கிறார்கள்.

ஆனால் சட்ட நடைமுறைகள் எந்த பக்கம் செல்கிறது என்பதை கூற முடியாது. முழு அடைப்பால் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். முழு அடைப்பால் எதையும் சாதிக்க முடியாது. பெங்களூருவில் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயுதப்படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். எங்கெங்கு தேவைப்படுகிறதோ அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மாநிலத்தின் நலன்

பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டால் நல்லது. அவர்கள் இப்போது தான் ஒன்றாக சேர்ந்துள்ளனர். காவிரி விவகாரத்தில் அரசு 2 முறை அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவரங்களை கொடுத்தது. இதில் மூடிமறைக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. மாநிலத்தின் நலனை காக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story