கிரிக்கெட் விளையாட்டில் தகராறு வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து
சிக்கமகளூருவில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபரை எதிரணியினர் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கமகளூரு
கிரிக்கெட் விளையாடினர்
சிக்கமகளூரு(மாவட்டம்) டவுன் கவுரிகாலவே பகுதியைச் சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 24). இவர் நேற்று முன்தினம் மாலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார்.
அப்போது இப்ராகிம் அணிக்கும், எதிர் அணியினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த எதிரணியினர் இப்ராகிம் மற்றும் அவரது அணியை சேர்ந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
மேலும் அவர்கள் இப்ராகிமை சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் இப்ராகிம் படுகாயம் அடைந்தார். அதையடுத்து அவர்கள், இப்ராகிமை அங்குள்ள சாக்கடையில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
வலைவீச்சு
இதையடுத்து அப்பகுதியினர் இப்ராகிமை மீட்டு சிகிச்சைக்காக சிக்கமகளூருவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்த பசவனஹள்ளி போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று இப்ராகிமிடம் விசாரித்தனர்.
இப்ராகிம் அணியினருக்கும், எதிரணியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததும், இந்த நிலையில் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட தகராறில் அவர்கள் கத்தியால் குத்தியதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும் இப்ராகிம் போலீசாரிடம் தெரிவித்தார். அதையடுத்து போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.