ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க வேண்டும்; கர்நாடக அரசுக்கு சமூக ஆர்வலர் கடிதம்
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க கோரி கர்நாடக அரசுக்கு சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு:
சொத்து குவிப்பு வழக்கு
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் கீழ்கோர்ட்டின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது. இதில் பெங்களூரு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பு வரும்போது, ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்ததால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர். தண்டனை காலம் முடிவடைந்ததை அடுத்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஏலம் விட சிறப்பு வக்கீல்
இந்த நிலையில் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட விலை உயர்ந்த புடவைகள், செருப்புகள், கணினிகள், தங்க, வைர நகைகள் போன்றவை கர்நாடக அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, பெங்களூரு நகர கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
அரசுக்கு கடிதம்
ஆனால் மாநில அரசு இதுவரை சிறப்பு வக்கீலை நியமிக்கவில்லை. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விட சிறப்பு வக்கீலை நியமிக்க கோரி கர்நாடக அரசுக்கு நரசிம்மமூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். மேலும் இது தொடர்பான மனு சுப்ரீம் கோர்ட்டில் வருகிற ஏப்ரல் மாதம் 11-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.