காபி தோட்டத்தில் புகுந்த காட்டு யானை


காபி தோட்டத்தில் புகுந்த காட்டு யானை
x
தினத்தந்தி 5 March 2023 12:15 PM IST (Updated: 5 March 2023 12:15 PM IST)
t-max-icont-min-icon

கொப்பா தாலுகாவில் காபி தோட்டத்தில் புகுந்த காட்டு யானையால் தொழிலாளிகள் அலறி அடித்து ஓட்டம் ஓடினர்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகாவிற்கு உட்பட்டது பசரிக்கட்டே கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. பின்னர் பசரிக்கட்டே கிராமத்திற்குள் புகுந்தது. பின்னர் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான காபி தோட்டத்திக்குள் காட்டு யானை புகுந்தது. அப்போது காபி தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர். அதையடுத்து அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.


Next Story