தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
எலந்தூரில் தோட்டத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்துவருகிறது.
கொள்ளேகால்;
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா தொட்டகெரே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் தொட்டகெரே மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வனப்பகுதியில் இருந்து தொட்டகெரே கிராமத்திற்குள் காட்டுயானை ஒன்று இரைதேடி வந்துள்ளது. பின்னர் காட்டுயானை, அங்குள்ள தோட்டத்திற்குள் புகுந்து சோளம், கரும்பு சாகுபடி மற்றும் வாழை மரங்களை நாசப்படுத்திவிட்டு சென்றது. இதேபோல் அருகே உள்ள தோட்டங்களுக்குள் புகுந்தும் காட்டுயானை பயிர் சாகுபடிகளை நாசப்படுத்தியது.
இதைப்பார்த்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் காட்டுயானையை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் காட்டுயானை வனப்பகுதிக்குள் செல்லவில்லை. இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் நீண்டநேரம் போராடி காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதைதொடர்ந்து கிராம மக்கள், வனத்துறையினரிடம் காட்டுயானை அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும்படியும் கோரிக்கை வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர்.