'ஆதிபுருஷ்' டீசர் விவகாரம்: ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? - மத்திய பிரதேச மந்திரி கேள்வி


ஆதிபுருஷ் டீசர் விவகாரம்: ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? - மத்திய பிரதேச மந்திரி கேள்வி
x
தினத்தந்தி 5 Oct 2022 3:33 AM GMT (Updated: 5 Oct 2022 4:41 AM GMT)

'ஆதிபுருஷ்' படத்தில் சீதை, அனுமன், ராவணன் உள்ளிட்டோர் சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா விமர்சித்துள்ளார்.

போபால்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாசும், சீதை கதாபாத்திரத்தில் கிரித்தி சனோனும், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலி கானும் நடித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படத்தின் டீசர் அக்டோபர் 2-ந்தேதி வெளியானது. இந்த நிலையில் 'ஆதிபுருஷ்' டீசரில் சீதை, அனுமன், ராவணன் உள்ளிட்டோர் சித்தரிக்கப்பட்டிருப்பது குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா விமர்சித்துள்ளார். மேலும் பெரும்பான்மை சமூகத்தின் மதத்தை மட்டும் ஏன் திரைப்படங்களில் குறிவைக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

"எங்கள் மத நூல்களில், அனுமனின் உடை குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மத நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் டீசரில் அதற்குப் பதிலாக அவர் தோல் ஆடை அணிந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அவரது தோல் சிவப்புக்கு பதிலாக கருமையாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். சீதையின் கதாபாத்திரம் மற்றும் அவர் உடை அணியும் விதம் கூட சிதைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது, படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

பாபா மகாகலில் சொமேட்டோ விளம்பரம், சன்னி லியோனின் ராதா பாடல், சப்யசாச்சியின் மங்களசூத்ரா விளம்பரம், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் திரைப்படம், ஆஷ்ரம் வெப் சீரிஸ் என ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? ஏன் நாங்கள் (இந்துக்கள்) மட்டும் குறியாக உள்ளோம்?

பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் இந்த முறை தவறானது. இந்த படைப்பு சுதந்திரத்தை மற்ற மதங்கள் மீதும் எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். 'ஆதிபுருஷ்' படத்தின் இயக்குனர் ஓம் ராவத்துக்கு படத்தில் இருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளேன்" என்று கூறியுள்ளார்.


Next Story