எஸ்.ஐ. தேர்வு முறைகேடு: சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ்-அரசு கடும் எதிர்ப்பு


எஸ்.ஐ. தேர்வு முறைகேடு: சட்டசபையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரஸ்-அரசு கடும் எதிர்ப்பு
x
தினத்தந்தி 15 Sep 2022 6:45 PM GMT (Updated: 15 Sep 2022 6:45 PM GMT)

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

பெங்களூரு: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து காங்கிரஸ் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஒத்திவைப்பு தீர்மானம்

கர்நாடக சட்டசபையில் இன்று கேள்வி நேரம், பூஜ்ஜிய நேரம் முடிவடைந்த பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசுகையில், "கர்நாடகத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நியமன தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் டி.ஜி.பி. உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பெரிய அளவில் லஞ்சம் கைமாறியுள்ளது. அந்த தேர்வை ரத்து செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முக்கியமான விஷயம் என்பதால் இதுபற்றி ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும்" என்று சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சட்டத்துறை மந்திரி மாதுசாமி, "சபை விதிகள்படி அண்மையில் நடந்த சம்பவங்கள் குறித்து மட்டுமே ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க முடியும். சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேடு அண்மையில் நடந்தது அல்ல. இது நடந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அதனால் இதை ஒத்திவைப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்க கூடாது. அதே நேரத்தில் வேறு வடிவத்தில் விவாதிக்க அனுமதி வழங்கினால் அதற்கு எங்களின் அனுமதி உண்டு. கடந்த கால ஆட்சியில் என்னெ்ன முறைகேடுகள் எல்லாம் நடைபெற்றது என்பதையும் நாங்கள் இந்த சபைக்கு எடுத்து சொல்கிறோம்" என்றார்.

நியமன முறைகேடு

மந்திரி மாதுசாமியின் இந்து கருத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முறைகெடு விவகாரம் அம்பலமான பிறகு சட்டசபை முதல் முறையாக இப்போது தான் கூடியுள்ளது. அதனால் இது அண்மையில் நடந்த சம்பவமாக தான் கருத வேண்டும் என்றனர். இதை ஏற்க மந்திரி மாதுசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கிருஷ்ண பைரேகவுடா எழுந்து, "சரி இந்த முறைகேடு விவகாரம் குறித்து வேறு வடிவத்தில் அனுமதி வழங்குங்கள். நாங்கள் அதில் பங்கேற்று பேசுகிறோம்" என்றார். இதை அரசும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து சபாநாயகர் காகேரி, "இந்த சப்-இன்ஸ்பெக்டர் நியமன முறைகேடு குறித்து விதி எண் 69-ன் கீழ் விவாதிக்க அனுமதி வழங்குகிறேன். வெள்ள பாதிப்பு குறித்த விவாதம் முடிவடைந்த பிறகு இதற்கு அனுமதி அளிக்கிறேன்" என்றார். அதைத்தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்கு வந்தது.


Next Story