குட்டி ஈன்ற லட்சுமி, கோபாலசாமி தவிர ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அபிமன்யு உள்பட 12 யானைகள் பங்கேற்கிறது


குட்டி ஈன்ற லட்சுமி, கோபாலசாமி தவிர ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அபிமன்யு உள்பட 12 யானைகள் பங்கேற்கிறது
x
தினத்தந்தி 18 Sep 2022 6:45 PM GMT (Updated: 18 Sep 2022 6:45 PM GMT)

குட்டி ஈன்ற லட்சுமி, கோபாலசாமி ஆகிய யானைகள் தவிர ஜம்பு சவாரி ஊர்வலத்தில் அபிமன்யு உள்பட 12 யானைகள் பங்கேற்கிறது என்று வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி கரிகாலன் தெரிவித்துள்ளார்.

மைசூரு;


மைசூரு தசரா விழா

மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்தமாதம்(அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தசரா விழாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைக்க உள்ளார். தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 14 யானைகள் மைசூரு அரண்மனை வளாகத்திற்கு 2 கட்டங்களாக அழைத்து வரப்பட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி என்ற யானை குட்டி ஈன்றது. அந்த குட்டியானைக்கு ஸ்ரீதத்தாத்ரேயா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

லட்சுமி யானை குட்டி ஈன்றதால் ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அதற்கு ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக மைசூரு வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரி கரிகாலன் தெரிவித்ததாவது:-

12 யானைகள் பங்கேற்கும்

மைசூரு தசரா விழா ஜம்பு சவாரி ஊர்வலத்திற்காக அபிமன்யு உள்பட 14 யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளது. தங்க அம்பாரியை அபிமன்யு என்ற யானை சுமக்கிறது. இதில் லட்சுமி யானை குட்டி ஈன்றதால் அதற்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது. அதேபோல் லட்சுமிக்கு துணையாக கோபாலசாமி யானை தேர்வு செய்யப்பட்டு அதனுடன் விடப்படுகிறது.

இதனால் லட்சுமி, கோபாலசாமி ஆகிய 2 யானைகள் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்காது. அதனால் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 12 யானைகள் தான் பங்கேற்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


பாகன்கள்-குடும்பத்தினருக்கு விருந்து

இந்த நிலையில் நேற்று காலை மைசூரு அரண்மனை வளாகத்தில் தசரா யானைகளின் பாகன்கள்-குடும்பத்தினருக்கு விருந்து அளிக்கப்பட்டது. பாகன்கள், அவர்களது குடும்பத்தினருக்கு மந்திரி எஸ்.டி.சோமசேகர் விருந்து பரிமாறினார். அதாவது லட்சுமி ஈன்ற குட்டிக்கு ஸ்ரீதத்தாத்ரேயா என்ற பெயர் சூட்டும் விழா வைத்து விருந்து அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விருந்து நிகழ்ச்சியில் கலெக்டர் பகாதி கவுதம், எம்.எல்.ஏ.க்கள் ராமதாஸ், ஜி.டி.தேவேகவுடா, நாகேந்திரா மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். விருந்து முடிந்து மந்திரி எஸ்.டி.சோமசேகர், பாகன்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கி அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.


Next Story