மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிபோவதால் தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்


மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிபோவதால்  தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
x

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளி போவதால் தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை வலியுறுத்தி உள்ளனர்.

பெங்களூரு: கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளி போவதால் தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கும்படி பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை வலியுறுத்தி உள்ளனர்.

தொகுதி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க...

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. மந்திரிசபையில் 6 இடங்கள் காலியாக உள்ளது. மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு, எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தார்கள். ஆனால் முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்று ஒரு ஆண்டுகள் ஆகியும் இன்னும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறவில்லை.

மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளிப்போன வண்ணம் இருக்கிறது. கர்நாடக சட்டசபைக்கு இன்னும் 6 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையில், கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இதுகுறித்து பா.ஜனதா மேலிட தலைவர்களுடன் பேசுவதற்காக தீபாவளி முடிந்த பின்பு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தல்

ஆனால் இந்த முறையும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறுமா?, இதற்கு பா.ஜனதா மேலிட தலைவர்கள் அனுமதி வழங்குவார்களா? என்பதே கேள்வி குறியாக தான் உள்ளது. இந்த நிலையில், மந்திரிசபை விரிவாக்கம் தொடர்ந்து தள்ளி போவதால் விரக்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள், தங்களது தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால், இந்த 6 மாதம் மந்திரியாக இருந்து எந்த சாதனையையும் செய்ய முடியாது என்று எம்.எல்.ஏ.க்கள் கருதுகிறார்கள். இதனால் தேர்தல் நேரத்தில் தங்களது தொகுதியில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கினால், அதன்மூலம் மக்களிடம் நல்ல பெயர் எடுக்கலாம் என்றும், இது தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கருதுகின்றனர்.

3 பேர் மட்டும்...

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால், மந்திரி பதவி கேட்டு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்கு பதிலாக, தொகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்தவும், இதற்கு தேவையான நிதியை பெறுவதிலும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் ஏற்கனவே மந்திரிகளாக இருந்து பதவியை இழந்த ஈசுவரப்பா, ரமேஷ் ஜார்கிகோளி, சி.பி.யோகேஷ்வர் மட்டும் மந்திரி பதவி வழங்கும்படி தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் கட்சி தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story