நாடு முழுவதும் சுட்டெரிக்கும் கோடை வெயில்: தொழிலாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு


நாடு முழுவதும் சுட்டெரிக்கும்  கோடை வெயில்: தொழிலாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
x

சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மத்திய அரசு சுகாதார ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி எடுக்கிறது. அத்துடன் பல மாநிலங்களில் அனல் காற்றும் வீசுகிறது. பல நகரங்களில் பகல்நேர வெப்பநிலை 40 டிகிரியை எட்டியிருக்கிறது. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை 2-வது நாளாக நேற்றும் அனல் காற்று வீசியது. அங்கு இயல்பான அளவை விட 5 டிகிரி வெப்பநிலை அதிகரித்து இருந்தது.

இதைப்போல பஞ்சாப், அரியானா மாநிலங்களில் 40 டிகிரி செல்சியசுக்கு மேலே வெப்பநிலை சென்றது. ராஜஸ்தானின் சுருவில் நிலவிய 42.2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களில் அடுத்த 4 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இவ்வாறு வாட்டி எடுக்கும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை பெரும் துயரில் தள்ளியிருக்கிறது. இதனால் அவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளில் கடும் வெயில் அடிக்கும் நிலையில், தொழிலாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. மேலும் இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தொழிலாளர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளுமாறு மத்திய அரசு சுகாதார ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

அதில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பணிநேரத்தை மாநிலத்தில் இயங்கும் நிறுவனங்கள் மாற்றியமைக்க வேண்டும். பணியிடங்களில் குடிநீர் வசதியை உறுதி செய்ய மாநில அரசு கண்காணிக்கவும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ள இடங்களில் அவசர கால ஐஸ்பெட்டிகள், வெப்பநோய் தடுப்பு மருந்துகள் இருப்பதை உறுதி செய்யவும், சுரங்க தொழிலாளர்கள் பணி செய்யும் இடத்தின் அருகிலேயே ஓய்வு எடுக்க இடம் அமைத்துக்கொடுக்கவும் அறிவுறுதப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலையால், திரிபுரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் கல்வி நிறுவனங்களை மூடியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story