பிரம்மபுத்ரா நதியில் நீருக்கடியில் ஹைட்ரோகார்பன் குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு


பிரம்மபுத்ரா நதியில் நீருக்கடியில் ஹைட்ரோகார்பன் குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு
x

பிரம்மபுத்ரா நதியில் நீருக்கடியில் ஆசியாவிலேயே மிகவும் நீளமான ஹைட்ரோகார்பன் குழாய் இணைப்பு அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

5,780 மீட்டர்

வடகிழக்கு இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் தேவை மையங்களை தேசிய எரிவாயு கட்டத்துடன் இணைக்கும், வடகிழக்கு எரிவாயு கட்டகம் திட்டத்தை இந்திராதனுஷ் கியாஸ் லிமிடெட் நிறுவனம் (ஐ.ஜி.ஜி.எல்) செயல்படுத்துகிறது.

இதன் ஒரு பகுதியாக அசாமில் பிரம்மபுத்ரா நதியில் நீருக்கடியில் 5,780 மீட்டருக்கு ஹைட்ரோகார்பன் குழாய் இணைப்பு அமைக்கும் பணிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டது. இது 1,000 மீ., 4,080 மீ., 700 மீ. என 3 பகுதிகளாக நடந்தது. இதில் முதல் மற்றும் 3-வது கட்டங்கள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இடையில் உள்ள 4,080 மீட்டர் தொலைவுக்கான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வந்தன.

பெரும் சவால்கள்

இந்தியாவின் வற்றாத நதிகளில் ஒன்றான அகன்ற பிரம்மபுத்ராவில் நீருக்கடியில் 24 அங்குலம் குழாய் பதிக்கும் இந்த பணிகளில் பெரும் சவால்கள் காணப்பட்டன. குறிப்பாக பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இந்த பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன.

எனினும் இந்த சவால்களை முறியடித்து இந்த பணிகளை நேற்று முன்தினம் ஐ.ஜி.ஜி.எல் நிறுவனம் வெற்றிகரமாக முடித்தது. அடுத்த கட்டமாக இந்த மூன்று பகுதிகளும் இரண்டு புள்ளிகளில் இணைக்கப்படும். இது தரை மட்டத்திற்கு கீழே 15 மீ. மற்றும் 8 மீ. ஆழத்தில் அமைந்திருக்கும்.

ஆசியாவிலேயே நீளமானது

பிரம்மபுத்ராவில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் ஆசியாவிலேயே மிகவும் நீளமானது எனவும், உலக அளவில் 2-வது நீளமானது என்றும் சிறப்பு பெற்று உள்ளது.

நீருக்கடியில் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்திருப்பதன் மூலம் வடகிழக்கு மாநில எரிவாயு கட்டடத்தின் 71 சதவீத பணிகள் முடிந்திருப்பதாகவும், மீதமுள்ள பணிகளும் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் முடிந்து விடும் எனவும் ஐ.ஜி.ஜி.எல்-ன் தலைமை செயல் அதிகாரி அஜித் குமார் தாகூர் தெரிவித்தார்.

இந்த பணிகளுக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியதற்காக அசாம் மாநில அரசுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.


Next Story