ரூ.50 லட்சம், ஒரு கிலோ நகைகள் கொடுத்த பின்னரும் பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் கைது


ரூ.50 லட்சம், ஒரு கிலோ நகைகள் கொடுத்த பின்னரும் பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை; கணவர் கைது
x

பல்லாரியில் ரூ.50 லட்சம் ரொக்கம், ஒரு கிலோ தங்க நகைகள் வரதட்சணையாக கொடுத்த பின்னரும், பெண் டாக்டரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

பல்லாரி:

பெண் டாக்டர்

பல்லாரி டவுன் பகுதியில் வசித்து வந்தவர் நாகிரெட்டி. இவரது மகன்கள் ஹரீஷ் ரெட்டி மற்றும் ரகுராம ரெட்டி.இதில் ரகுராம ரெட்டி இளைய மகன் ஆவார். இந்த நிலையில் ரகுராம ரெட்டிக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த டாக்டரான மவுனிகா என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம் ஆகும்.

ரகுராமரெட்டி டாக்டர் என்றும், அவர் பல்லாரியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருவதாகவும் மவுனிகாவிடமும், அவரது பெற்றோரிடமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதை நம்பிய மவுனிகாவின் பெற்றோர் ரகுராம ரெட்டிக்கு மவுனிகாவை திருமணம் செய்து கொடுத்தனர்.

வரதட்சணை

மேலும் அவர் கேட்ட ரூ.50 லட்சம் ரொக்கம், ஒரு கிலோ தங்க நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்திருந்தனர். திருமணத்திற்கு பின்புதான் ரகுராம ரெட்டி டாக்டர் இல்லை என்பதும், அவர் வேலை ஏதும் இல்லாமல் வீட்டில் இருந்து கொண்டு ஊர் சுற்றி வந்ததும் மவுனிகாவுக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி ரகுராம ரெட்டியிடம் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர் தான் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்றும், திருமணத்திற்காக டாக்டர் என பொய் சொன்னதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கொடுமை

இதற்கிடையே ரகுராமரெட்டி கூடுதல் வரதட்சணை கேட்டு மவுனிகாவை கொடுமைப்படுத்தினார். அவருக்கு அவரது தந்தை, சகோதரர் உள்பட குடும்பத்தினர் அனைவரும் உடந்தையாக இருந்தனர். இதையடுத்து மவுனிகா, கணவர் வீட்டில் இருந்து ஐதராபாத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கே சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகுராம ரெட்டி இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி அறிந்த மவுனிகா மற்றும் அவரது குடும்பத்தினர் ரகுராம ரெட்டியின் வீட்டுக்கு வந்து நியாயம் கேட்டனர். அப்போது அவர்களை ரகுராம ரெட்டி, அவரது தந்தை நாகி ரெட்டி, சகோதரர் ஹரீஷ் ரெட்டி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து அடித்து, உதைத்து விரட்டியடித்ததாக தெரிகிறது.

கைது

இதனால் மனமுடைந்த மவுனிகா இதுபற்றி பல்லாரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரகுராமரெட்டி மற்றும் அவரது குடும்பத்தினர் என மொத்தம் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ரகுராம ரெட்டி, ஹரீஷ் ரெட்டி மற்றும் நாகி ரெட்டி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story