பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி; போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்து அமைப்பினர் வாக்குவாதம்


பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி; போலீசார் தடுத்து நிறுத்தியதால் இந்து அமைப்பினர் வாக்குவாதம்
x

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட முயற்சி செய்தனர். தடுத்து நிறுத்த முயன்ற போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு:

ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டை பகுதியில் ஈத்கா மைதானம் உள்ளது. அந்த மைதானத்தில் பக்ரீத், முகரம் பண்டிகையின் போது முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் இந்து பண்டிகைகளை கொண்டாடவும் அனுமதி வழங்க வேண்டும் என்று சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் அரசுக்கு கோாிக்கை விடுத்தனர். ஆனால் வக்பு வாரியம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே ஈத்கா மைதானம் கர்நாடக அரசின் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்று மாநகராட்சி கூறியதால் மைதான விவகாரம் விசுவரூபம் எடுத்தது. இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட அனுமதி கேட்டு கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

போலீசாருடன் வாக்குவாதம்

மேலும் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட தடை விதித்த நீதிபதிகள், முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சாம்ராஜ்பேட்டை மைதானத்தின் அருகே உள்ள அய்யப்பன் கோவிலில், விநாயகர் சிலைகளை வைத்து இந்து அமைப்பினர் வழிபட முயன்றனர்.

இதுபற்றி அறிந்த போலீசார் கோவிலுக்கு சென்று விநாயகர் சிலை வைத்து வழிபடுவதை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், இந்து அமைப்பினர் இடையே வாக்குவாதம் உண்டானது. பின்னர் ஒருவழியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க மைதானத்தை சுற்றி பலத்த போலீ்ஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.


Next Story