பா.ஜ.க. பேரணியில் போலீசாரின் வாகனம் சேதம்; தீ வைப்பு... வைரலான வீடியோ


பா.ஜ.க. பேரணியில் போலீசாரின் வாகனம் சேதம்; தீ வைப்பு... வைரலான வீடியோ
x

Image courtesy:  @srinivasiyc

பா.ஜ.க. பேரணியில் போலீசாரின் வாகனம் ஒன்றின் ஜன்னல், கதவு, கண்ணாடி ஆகியவற்றை உடைத்து அதற்கு தீ வைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.



கொல்கத்தா,


மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மந்திரிகள் சிலர், பல கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, கைது செய்யப்பட்டு, வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, அரசின் ஊழலை கண்டித்து, கொல்கத்தா நகரில் பா.ஜ.க. சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் தலைமை செயலகம் நோக்கி பேரணி ஒன்றை நேற்று நடத்தினர். இதில் பங்கேற்க மேற்கு வங்காளத்தின் பல பகுதிகளில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் கொல்கத்தா நகருக்கு படையெடுத்தனர்.

எனினும், ராணிகஞ்ச், போல்பூர் மற்றும் துர்காப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு வெளியே மற்றும் பல இடங்களில் போலீசார் அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இதனால், பா.ஜ.க. தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே நேற்று கடுமையான மோதல் ஏற்பட்டது. பா.ஜ.க.வினர் பலரை போலீசார் கைது செய்து, தடுப்பு காவலுக்கு கொண்டு சென்றனர்.

இந்த பேரணியை தடுப்பதற்காக கொல்கத்தா எல்லை பகுதிகள், ஹவுரா நகரின் முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது. அவர்கள் அந்த வழியில், தடுப்பு வேலிகளை அமைத்து வாகனங்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் போலீசாரின் வாகனம் ஒன்று வன்முறையாளர்களால் சூறையாடப்பட்ட வீடியோ வெளிவந்து உள்ளது. அதில், போராட்டக்காரர்களில் ஒரு பகுதியினர் ஆவேசத்துடன் காவல் வாகனம் ஒன்றை கம்புகளால் அடித்தும், கண்ணாடி, ஜன்னல்களை உடைத்தும், மிதித்தும் சேதப்படுத்தினர்.


இதன்பின்பு, காவி நிற டி-சர்ட் அணிந்த நபர் ஒருவர், சிகரெட் பற்ற வைக்கும் லைட்டர் உதவியுடன் காவல் வாகனத்தின் உள்ளே இருந்த துண்டு துணியின் மீது தீயை பற்ற வைக்கிறார். இந்த காட்சிகள் கொண்ட வீடியோவை இளைஞர் காங்கிரசின் தேசிய தலைவர் ஸ்ரீனிவாஸ் தனது டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் போலீசார் ஜீப் மீது எந்த கட்சியின் தேசிய கலகக்காரர்கள் தீ வைத்து எரிக்கின்றனர் என அடையாளம் காணுங்கள் என அவர் அதில் பதிவிட்டு உள்ளார்.



Next Story