மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது - மல்லிகார்ஜுன கார்கே உறுதி


மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது - மல்லிகார்ஜுன கார்கே உறுதி
x

கோப்புப்படம்

தினத்தந்தி 17 July 2023 11:51 PM GMT (Updated: 18 July 2023 4:22 AM GMT)

அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை விவகாரத்தில், பழிவாங்கும் அரசியலுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது என்று மல்லிகார்ஜுன கார்கே உறுதிபட தெரிவித்தார்.

புதுடெல்லி,

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துைற சோதனை நடத்தியதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சிகளின் முக்கியமான ஆலோசனை கூட்டத்துக்கு முன்பாக, தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துைற சோதனை நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

இது, எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவும், பிளவுபடுத்தவும் மோடி அரசின் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கதை ஆகிவிட்டது.

ஒற்றுமையாக நிற்போம்

அதே சமயத்தில், மோடி அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எதிராக ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஒற்றுமையாக நிற்க முடிவு செய்துள்ளன. ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் கோழைத்தனமான தந்திரங்களுக்கு எதிர்க்கட்சிகள் அடிபணியாது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், மல்லிகார்ஜுன கார்கே நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை குறிவைத்து அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க.வோ, காங்கிரசோ பயப்படாது என்று அவர் கூறினார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

இதுபோல், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சருக்கு எதிரான அமலாக்கத்துறை சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். பா.ஜனதா, அரசியல் கட்சிகளை உடைக்க முயற்சிக்கிறது. அமலாக்கத்துறையை பயன்படுத்தி, ஒவ்வொருவரையும் அச்சுறுத்த பார்க்கிறது.

ஆனால், அமலாக்கத்துறையால் தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கூட்டணி கட்சியும் இருக்காது. பா.ஜனதாவில் இருந்து கூட நிறைய தலைவர்கள் ஏற்கனவே விலகி விட்டனர்.

இந்தியா போன்ற பெரிய நாட்டை அமலாக்கத்துறையை கொண்டு அச்சுறுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


Next Story