சாதியின் தாக்கம் அதிகம் உள்ள கர்நாடகா தேர்தல் : பா.ஜ.க.வின் பலவீனம் காங்கிரசின் பலமாக மாறுமா....!


சாதியின் தாக்கம் அதிகம் உள்ள கர்நாடகா தேர்தல் : பா.ஜ.க.வின் பலவீனம் காங்கிரசின் பலமாக மாறுமா....!
x
தினத்தந்தி 1 April 2023 5:33 AM GMT (Updated: 1 April 2023 10:12 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில், வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தினர் முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. 1985 ஆண்டு தேர்தலுக்கு கர்நாடகாவில் எந்த அரசியல் கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வரவில்லை.இந்த தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வருவதன் மூலம் 38 ஆண்டு கால வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா உறுதியாக உள்ளது.

மோடியின் கவர்ச்சி மற்றும் இரட்டை இயந்திர ஆட்சியின் முன்னேற்றத்தில் பாஜக நம்பிக்கை வைத்துள்ளது. ஆனால், சி-வோட்டர் சர்வே முடிவுகளைப் பார்க்கும்போது, பாரதிய ஜனதாவுக்கு எதிராக காற்று வீசுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. கர்நாடகாவில் ஆட்சி மாற்றத்தை 57 சதவீதம் பேர் விரும்புவதாக கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல், காங்கிரசுக்கு மிகவும் முக்கியமானது.

காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி மாநிலம் முழுவதும் பரவியுள்ள நிலையில், வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. இந்தப் பகுதிகளில் வீரசைவ-லிங்காயத் சமூகத்தினர் முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர்.

பழைய மைசூர் பகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் வலுவாக உள்ளது. கர்நாடக தேர்தலில் சாதியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மாநில மக்கள்தொகையில் லிங்காயத்துகள் 17 சதவீதம் உள்ளனர், அதே சமயம் ஒகலிகாக்கள் 15 சதவீதம் உள்ளனர். ஓபிசிக்கள் 35 சதவீதம், எஸ்சி/எஸ்டியினர் 18 சதவீதம், முஸ்லிம்கள் சுமார் 13 சதவீதம். பிராமணர்கள் 3 சதவீதம் உள்ளனர்.

கர்நாடக சட்டசபையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக உள்ளது. மோடியின் கவர்ச்சி, இந்துத்துவா கொள்கை, இரட்டை என்ஜின் ஆட்சியால் அடைந்துள்ள முன்னேற்றத்தின் மீது அக்கட்சி நம்பிக்கை வைத்துள்ளது.

லிங்காயத் சமூகத்தின் சக்திமிக்க தலைவரான பிஎஸ் எடியூரப்பா, தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது சேவையை பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்திக்கொள்ளும்.

எடியூரப்பாவை பாஜக ஓரங்கட்டுவதை ஊக்குவிப்பதன் மூலம் லிங்காயத் வாக்காளர்களை கவர முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. கர்நாடகாவில் 100 தொகுதிகளில் லிங்காயத்துகள் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தற்போதைய சட்டசபையில் 54 லிங்காயத் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், பாஜக சார்பில் 37 பேர் உள்ளனர். 1952 முதல், கர்நாடகாவில் 23 பேர் முதல்-மந்திரியாக இருந்து உள்ளனர், அவர்களில் பத்து பேர் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

சமீபத்தில் வடகிழக்கு மாநிலங்களில் நடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடக தேர்தல் மிகவும் முக்கியமானது. கர்நாடகாவில் வெற்றி பெற்றால் அந்த கட்சி தலைவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜகவை எதிர்த்துப் போராட காங்கிரசுக்கு தேவையான மன உறுதி கிடைக்கும்.

2018 தேர்தலுக்குப் பிறகு, கிங் மேக்கராக மாறிய மதசார்பற்ற ஜனதா தளம் மீண்டும் அதே மேஜிக்கை செய்ய நம்புகிறது. ஆனால், உள்கட்சி வேறுபாடுகளும், குடும்பக் கட்சி சணடையும் அந்தக் கட்சிக்கு மைனஸாக இருக்கும்.

1999ல் உருவான ஜேடிஎஸ் இதுவரை தனித்து ஆட்சிக்கு வந்ததில்லை. ஆனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்தது.

2006ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து 20 மாதங்கள் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இருந்தது. 2018 தேர்தலுக்கு பிறகு குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் 14 மாதங்கள் முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இம்முறை, தனித்து ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் 'மிஷன் 123'க்கு குறி வைத்துள்ளது. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. மதசார்பற்ற ஜனதா தளம் 2004 இல் 58 இடங்களையும், 2013 இல் 40 இடங்களையும் வென்றது.

இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் களம் இறங்கி உள்ளன.

இதை தவிர ஒரு சில சிறிய கட்சிகளும் போட்டியிடுகின்றன. இருந்த போதிலும் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே தான் நேரடி மோதல் நிலவுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதா 104 இடங்களை பிடித்தது. காங்கிரஸ் 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக சி. வோட்டர்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

இதில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்பது தெரியவந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 115 முதல் 127 இடங்களும் பாரதிய ஜனதாவுக்கு 68 முதல் 80 இடங்களும் , மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு 23 முதல் 35 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 0 முதல் 2 இடங்கள் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

காங்கிரசுக்கு 40.1 சதவீத ஓட்டுகளும், பா.ஜ.க.வுக்கு 34.7 சதவீத ஓட்டுகளும், மத சார்பற்ற ஜனதாதளத்திற்கு 17.9 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சில தொகுதிகளில் பாரதிய ஜனதா- காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

அடுத்த முதல் மந்திரியாக யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39.1 சதவீதம் பேர் காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு 31.1 சதவீதம் பேரும், குமாரசாமிக்கு 21.4 சதவீதம் பேரும், காங்கிரசை சேர்ந்த டி.கே.சிவகுமாருக்கு 3.2 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

50 சதவீதம் பேர் பாரதிய ஜனதா ஆட்சி மோசம் என கருத்து தெரிவித்து உள்ளனர் கர்நாடகாவில் பாரதிய ஜனதா மீதான அதிருப்தியால் அங்கு "கை" ஓங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் சமீபத்தில் லஞ்ச புகாரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விபாட்சப்பா மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

மேலும் சமீபத்தில் கர்நாடக பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தும் கடுமையான போராட்டங்கள் நடந்தது.

போலீஸ் தேர்வில் நடந்த ஊழல் தொடர்பாக பல அதிகாரிகள் சிக்கினார்கள். இதனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்து உள்ளதாக தெரிகிறது.

இருந்த போதிலும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா மும்முரமாக உள்ளது. பிரதமர் மோடி பல தடவை கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார்.

மத்தியிலும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளதால் எங்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு என பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையுடன் தெரிவித்து வருகின்றனர்.

2018 சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபை தேர்தல் 2018 மே 12 அன்று நடந்து, மே 15 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பின்னர் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. எஸ். எடியூரப்பா (17 மே 2018, 19 மே 2018) முதல்-மந்திரியாக பதவியேற்றார் பிறகு, எச். டி. குமாரசாமி பொறுப்பேற்றார்.

பின்னர் கட்சி தாவலால் பா.ஜ.கவிடன் ஆட்சியை இழந்தன. இதை தொடர்ந்து பசவராஜ் பொம்பை முதல்-மந்திரியானார். தற்போதுவரை அவர் முதல்-மந்திரியாக உள்ளார்.

2013ல் சட்டசபை தேர்தல்

2013ம் ஆண்டு மே 5ம் தேதி தேர்தல் நடந்தது. காங்கிரஸ் 122 இடங்களில் வெற்றி பெற்று ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தது. சித்தராமையா முதல்-மந்திரியானார்.

இந்திய தேசிய காங்கிரஸ்: 122

மதச்சார்பற்ற ஜனதா தளம் : 40

பா.ஜ.க: 40

கர்நாடக ஜனதா கட்சி: 6

மற்றவை: 9

சட்டசபை தேர்தல் 2008

கர்நாடக வரலாற்றில் முதல்முறையாக பா.ஜ.க. 110 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாக உள்ள நிலையில், அக்கட்சி ஆறு சுயேட்சை வேட்பாளர்களுடன் கூட்டணி அமைத்தது.

2008 மே 10, மே 16 மற்றும் மே 22 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பி.எஸ். எடியூரப்பா முதல்-மந்திரியானார். ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் 2011 இல் ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு டி.வி. சதானந்த கவுடா (2011 முதல் 2012 வரை) ஜகதீஷ் ஷெட்டர் (2012 - 2013) ஆகியோர் பதவியேற்றனர்.

பா.ஜ.க: 110

இந்திய தேசிய காங்கிரஸ்: 80

மதச்சார்பற்ற ஜனதா தளம் :28

மற்றவை: 6

சட்டசபை தேர்தல் 2004

2004 ஏப்ரல் 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தது. பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

2006-ம் ஆண்டு வரை மாநிலத்தின் முதல் மந்திரியாக இருந்தவர் தரம் சிங். கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, எச்.டி.குமாரசாமி பொறுப்பேற்றார். பிறகு, ஊழல் குற்றச்சாட்டில் அவர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எடியூரப்பா 2007ல் ஏழு நாட்கள் முதல் மந்திரியாக இருந்தார், அப்போது அடுத்த தேர்தல் வரை 189 நாட்களுக்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது.

பா.ஜ.க : 79

காங்கிரஸ்: 65

மதச்சார்பற்ற ஜனதா தளம் : 58

ஐக்கிய ஜனதா தளம் : 5

மற்றவை: 17

சட்டசபை தேர்தல் 1999

அக்டோபர் 1999 இல் தேர்தல் நடைபெற்றது.காங்கிரஸ் 132 இடங்களில் வெற்றி பெற்று எஸ்.எம்.கிருஷ்ணா முதல் மந்திரியாக பதவியேற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ்: 132

பா.ஜ.க.: 44

ஐக்கிய ஜனதா தளம்: 18

மதச்சார்பற்ற ஜனதா தளம்: 10

சட்டசபை தேர்தல் 1994

ஜனதா தளம் 115 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எச்.டி.தேவே கவுடா டிசம்பர் 11, 1994 முதல் மே 31, 1996 வரை முதல் மந்திரியாக இருந்தார். ஜே.எச்.படேல் மே 31, 1996 முதல் அக்டோபர் 7, 1999 வரை ஆட்சியில் இருந்தார்.

ஜனதா தளம்: 121

பாரதிய ஜனதா கட்சி: 40

இந்திய தேசிய காங்கிரஸ்: 34

மற்றவை: 35

சட்டசபை தேர்தல் 1985

ஜனதா தளம் கட்சி 139 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ராமகிருஷ்ண ஹெக்டே முதல் மந்திரியானார். பின்னர் 1988 ஆகஸ்டில் எஸ்.ஆர்.பொம்மை முதல் மந்திரியானார்

ஜனதா கட்சி: 139

இந்திய தேசிய காங்கிரஸ்: 65

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி: 3

பா.ஜ.க. : 2

பொதுவுடைமைக்கட்சி: 2

சுயேச்சைகள்: 13

சட்டசபை தேர்தல் 1983

ஜனதா கட்சி 95 இடங்களில் வெற்றி பெற்று முதல் காங்கிரஸ் அல்லாத அரசை ராமகிருஷ்ண ஹெக்டே அமைத்தார். கர்நாடக சட்டசபை தேர்தல் 1978ல் காங்கிரஸ் (இந்திரா) பிரிவு 149 இடங்களில் வெற்றி பெற்று தேவராஜ் முதல் மந்திரியானார்

1972 முதல் கர்நாடக முதல் மந்திரிகள்

1972 கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் (இந்திரா) வெற்றி பெற்றதை அடுத்து, டி.தேவராஜ் அரசு முதலமைச்சரானார்.

-டி. தேவராஜ் (20 மார்ச் 1972 - 31 டிசம்பர் 1977)

ஜனாதிபதி ஆட்சி (31 டிசம்பர் 1977 - 28 பிப்ரவரி 1978)

-டி. தேவராஜ் (28 பிப்ரவரி 1978 - 7 ஜனவரி 1980)

-ஆர். குண்டுராவ் (12 ஜனவரி 1980 - 6 ஜனவரி 1983)

- ராமகிருஷ்ண ஹெக்டே (8 மார்ச் 1985 - 13 பிப்ரவரி 1986

-எஸ். ஆர். பொம்பை (13 ஆகஸ்ட் 1988 - 21 ஏப்ரல் 1989)

ஜனாதிபதி ஆட்சி (21 ஏப்ரல் 1989 - 30 நவம்பர் 1989)

-வீரேந்திர பாட்டீல் (30 நவம்பர் 1989 - 10 அக்டோபர் 1990)

ஜனாதிபதி ஆட்சி (10 அக்டோபர் 1990 - 17 அக்டோபர்)

– எஸ். பங்காரப்பா (7 அக்டோபர் 1990 - 19 நவம்பர் 1992)

- எம். வீரப்ப மொய்லி (19 நவம்பர் 1992 - 11 டிசம்பர் 1994)

-எச். டி. தேவ கவுடா (11 டிசம்பர் 1994 - 31 மே 1996)

-ஜெ. எச். படேல் (31 மே 1996 - 7 அக்டோபர் 1999)

-எஸ். எம். கிருஷ்ணா (11 அக்டோபர் 1999 - 28 மே 2004)

– என். தர்ம சிங் (28 மே 2004 - 2 பிப்ரவரி 2006)

-எச். டி. குமாரசாமி (3 பிப்ரவரி 2006 - 8 அக்டோபர் 2007)

- ஜனாதிபதி ஆட்சி (8 அக்டோபர் 2007 - 12 நவம்பர் 2007)

-பி. எஸ். எடியூரப்பா (12 நவம்பர் 2007 - 19 நவம்பர் 2007)

- ஜனாதிபதி ஆட்சி (20 நவம்பர் 2007 - 29 மே 2008)

-பி. எஸ். எடியூரப்பா (30 மே 2008 - 4 ஆகஸ்ட் 2011)

-டி. வி. சதானந்த கவுடா (ஆகஸ்ட் 2011 - 11 ஜூலை 2012)

-ஜெகதீஷ் ஷெட்டர் (12 ஜூலை 2012 - 12 மே 2013)

- சித்தராமையா (13 மே 2013 - 15 மே 2018)

-பி. எஸ். எடியூரப்பா (17 மே 2018 - 19 மே 2018)

-எச். டி. குமாரசாமி (23 மே 2018 - 23 ஜூலை 2019)

-பி. எஸ். எடியூரப்பா (26 ஜூலை 2019 - 26 ஜூலை 2021)

-பசவராஜ பொம்மை (28 ஜூலை, 2021) தற்போது


Next Story