குஜராத் கேளிக்கை விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு


குஜராத் கேளிக்கை விளையாட்டு அரங்கு தீ விபத்தில் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு
x

குஜராத்தில் கேளிக்கை விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரில் மிகப்பெரிய கேளிக்கை விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விளையாட்டு அரங்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்குமான விளையாட்டுகள், பொழுதுபோக்கு தளங்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.

இந்த நிலையில் கோடை விடுமுறை காரணமாக சிறுவர்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் நேற்று இந்த விளையாட்டு அரங்கில் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடியும், உணவு விடுதிகளுக்கு சென்று உணவுகளை ருசித்தும் மகிழ்ச்சியாய் பொழுதை கழித்து கொண்டிருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் விளையாட்டு அரங்கில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென கொழுந்துவிட்டு எரிந்த தீ சற்று நேரத்துக்குள்ளாக விளையாட்டு அரங்கம் முழுவதும் பரவியது.இதில் தீப்பிழம்புகளுடன் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் எழுந்தது. தீ விபத்தை தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட அனைவரும் அலறியடித்துக்கொண்டு அங்கும், இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.ஒரு சிலர் விளையாட்டு அரங்கத்தை விட்டு விரைவாக வெளியேறி உயிர் தப்பினர். அதே சமயம் தீப்பிடித்த சற்று நேரத்தில் விளையாட்டு அரங்கின் நாலாபுறமும் தீ சூழ்ந்ததால் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விளையாட்டு அரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் விளையாட்டு அரங்கத்தை நெருங்க முடியவில்லை.இதனிடையே தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் ஆம்புலன்சுகளும் வரவழைக்கப்பட்டன.

தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து விளையாட்டு அரங்கத்துக்குள் இருந்து சிறுவர்கள் உள்பட 24 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில், தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கேளிக்கை விளையாட்டு அரங்க தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.


Next Story