குடகில் தொடர் கனமழை; காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
குடகில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குடகு;
குடகில் கனமழை
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் மாவட்டத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. குடகில் கரிகே, சம்பாஜே உள்ளிட்ட பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மடிகேரி-மங்களூரு சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும் குடகில் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பாகமண்டலா, தலைக்காவிரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால், எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்தப்பகுதிகளில் பல கிராமங்களின் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு
கர்நாடக-தமிழ்நாடு மக்களின் உயிர்நாடியாக உள்ள காவிரி நதியின் பிறப்பிடமான தலைக்காவிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பான பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பாகமண்டலா பகுதியில் சாலையில் பாறாங்கல் ஒன்று உருண்டு விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாறாங்கல்லை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். நாபொக்லு-கலந்தலா, மடிகேரி-பாகமண்டலா சாலையிலும், மொன்னச்சேரி பகுதியில் உள்ள சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மூதாட்டி படுகாயம்
தொடர் கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பல கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
சோமவார்பேட்டை தாலுகா சுழகலே கிராமத்தை சேர்ந்த வசந்தம்மா (வயது 69) என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல், ஹாரங்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று விடுமுறை
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று (புதன்கிழமை) குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் உத்தர விட்டுள்ளார்.