ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டிய மாநகராட்சி என்ஜினீயர்


ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டிய மாநகராட்சி என்ஜினீயர்
x
தினத்தந்தி 21 Jun 2023 6:45 PM GMT (Updated: 21 Jun 2023 6:46 PM GMT)

ராஜகால்வாயை ஆக்கிரமித்து வீடு கட்டிய மாநகராட்சி என்ஜினீயர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆர்.டி.நகர்:-

பெங்களூருவில் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்வதற்கு, ராஜகால்வாய்கள் ஆக்கிரமிப்பு தான் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் ராஜ கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. மழைக்காரணமாக மகாதேவபுரா பகுதியில் நடைபெற்று வந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனினும், ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆர்.டி.நகர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது அந்த பகுதியில் ராஜ கால்வாய் மீது வீடு ஒன்று கட்டப்பட்டு இருந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த வீடு மாநகராட்சி முதன்மை என்ஜினீயர் பிரகலாத் என்பவருடையது என்பது தெரிந்தது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வேலியே பயிரை மேய்ந்த கதையாக, ராஜ கால்வாய்களை பாதுகாக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரியே இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறி பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனரிடம் புகார்கள் எழுந்துள்ளன. அதன்பேரில் விசாரணை நடத்த உள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.


Next Story