டி.நரசிப்புரா அருகே போலீஸ் நிலையத்தை பிணத்துடன் முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம்


டி.நரசிப்புரா அருகே  போலீஸ் நிலையத்தை பிணத்துடன் முற்றுகையிட்டு தலித் அமைப்பினர்  போராட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 6:45 PM GMT (Updated: 9 Aug 2023 6:45 PM GMT)

டி.நரசிப்புரா அருகே போலீஸ் நிலையத்தை பிணத்துடன் முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

டி.நரசிப்புரா-

டி.நரசிப்புரா அருகே போலீஸ் நிலையத்தை பிணத்துடன் முற்றுகையிட்டு தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மயான வசதி இல்லை

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா பகுதியில் நரிபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் நரிபுரா கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு சொந்தமான மயானம் இல்லை. இதனால் அந்தப்பகுதி தலித் மக்கள் யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்ய 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு கொண்டு சென்று அரசுக்கு சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்து வந்தனர்.

இதனால் அவர்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் தலித் மக்களுக்கு தனிமயானம் வேண்டும் என நரிபுரா கிராமமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நரிபுரா கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை அடக்கம் செய்ய கிராமமக்கள் முடிவு செய்தனர்.

தலித் அமைப்பினர் போராட்டம்

அதன்படி அவர்கள் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய அருகே உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த நரிபுரா கிராமமக்கள், தலித் அமைப்பினர் பிணத்துடன் தலக்காடு போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையம் முன்பு பிணத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், நரிபுரா கிராமத்தில் உள்ள தலித் மக்களுக்கு என்று தனி மயானம் இல்லை. இதனால் இறந்த தலித் மக்களின் உடலை அடக்கம் செய்ய முடியவில்லை. இதனால் உடலை அடக்கம் செய்ய 4 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சமாதானம்

ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் டி.நரசிப்புரா தாசில்தார், தலக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அகியோர் பேச்சுவார்தை நடத்தினர்.

இதில் சமாதானம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பிணத்தை அரசுக்கு சொந்தமான மயானத்தில் அடக்கம் செய்தனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story