திருப்பதியில் ரூ.100 கோடியில் தங்கும் விடுதி கட்ட முடிவு


திருப்பதியில் ரூ.100 கோடியில் தங்கும் விடுதி கட்ட முடிவு
x

திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.100 கோடியில் தங்கும் அறைகள் கட்டப்பட உள்ளது.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27-ந்தேதி முதல் ஆகஸ்ட் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

கூட்டத்தில் முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இது குறித்து தேவாசனை அதிகாரிகள் கூறுகையில்:-

திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரூ.100 கோடியில் தங்கும் அறைகள் கட்டப்பட உள்ளது. மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நாட்களில் தரிசனத்திற்கு வரிசையில் நிற்கும் பக்தர்கள் வெயில் மற்றும் மழையில் சிரமம் அடைந்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக ரூ.33 கோடியில் மேற்கூரையுடன் கூடிய வரிசை மண்டப கட்டிடம் அமைக்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

பிரம்மோற்சவ விழா தொடக்க நாள் அன்று தங்க கொடிமரத்தில் கொடி ஏற்றுவதற்காக திருப்பதி அடுத்த ஏர்பேடு மண்டலம், செல்லூரில் இருந்து விஷ்ணு தர்பை வனத்துறை அதிகாரிகளால் நேற்று ஏழுமலையான் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 22 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட தர்ப்பை பாய் மற்றும் 200 அடி நீளம் கொண்ட தர்ப்பை கயிறு கொண்டு வந்து ரங்கநாயக மண்டபத்தில் உள்ள சேஷ வாகனத்தின் மீது வைத்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது.

பிரம்மோற்சவ தொடக்க விழாவின்போது தர்ப்ப பாயில் வைகாசன ஆகம விதிப்படி கருட படம் வரைந்து கொடியேற்றப்பட உள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதியில் நேற்று 65,158 பேர் தரிசனம் செய்தனர். 28,416 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.44 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.


Next Story