டெல்லியில் கொடூரம்: திருமணமான நபரிடம் மனைவியை விட்டு பிரிந்து தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்திய இளம்பெண் கொலை!
டெல்லியில், ஆசாத்பூரில் உள்ள கேவல் பார்க் பகுதியில் 23 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில், ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆசாத்பூரில் உள்ள கேவல் பார்க் பகுதியில் 23 வயது இளம்பெண் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர கொலை வழக்கில் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போலீசார் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ஆசாத்பூரில் பெண் கொலையின் பின்னணி குறித்து வடமேற்கு டெல்லி போலீஸ் டிசிபி உஷா ரங்னானி கூறியதாவது:-
பாதிக்கப்பட்ட பெண்மணி, குற்றம் சாட்டப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருடன் உறவில் இருந்தார். குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஏற்கெனவே திருமணமானவர்.
இந்த விஷயத்தை அந்த பெண் அறிந்ததும், அவரை அவருடைய மனைவியை விட்டு பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த நபருக்கு அழுத்தம் கொடுத்தார். அப்படி இல்லாவிட்டால், தான் அந்த நபரின் நடத்தையை சமூகத்தில் அம்பலப்படுத்துவதாக மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
இவ்வாறு போலீஸ் டிசிபி உஷா ரங்னானி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.