ஆக்கி அணி கேப்டனுக்கு எதிரான பதிவுகளை வெளியிட முன்னாள் பயிற்சியாளருக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை


ஆக்கி அணி கேப்டனுக்கு எதிரான பதிவுகளை வெளியிட முன்னாள் பயிற்சியாளருக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை
x

இந்திய ஆக்கி அணி கேப்டனுக்கு எதிரான பரபரப்பு குற்றச்சாட்டு பதிவுகளை வெளியிட முன்னாள் பயிற்சியாளருக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது.



புதுடெல்லி,


இந்திய ஆக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஜோயெர்டு மரிஜ்னே, 2018-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் இளம் வீரர்களை சரியாக விளையாட வேண்டாம் என இந்திய ஆக்கி அணியின் கேப்டன் பதவி வகிக்கும் மன்பிரீத் சிங் கேட்டு கொண்டார் என்ற குற்றச்சாட்டை கூறி சமீபத்தில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

இதுபற்றி மரிஜ்னே தனது, வில் பவர் என்ற பெயரிடப்பட்ட புதிய புத்தகத்திலும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார் என கூறப்படுகிறது.

இதற்கு எதிராக, மன்பிரீத் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட விசயங்கள் அடங்கிய தொகுப்பு விவரங்கள் முக்கிய தினசரி பத்திரிகைகளுக்கு கசிந்துள்ளன என்றும் தனது மனுவில் மன்பிரீத் சிங் குறிப்பிட்டு உள்ளார்.

இதனை தொடர்ந்து, நீதிபதி அமித் பன்சால் தலைமையிலான அமர்வு மேற்கொண்ட வழக்கு விசாரணையில், மன்பிரீத்துக்கு எதிராக மரிஜ்னே எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய எந்தவொரு அறிக்கையை வெளியிடவோ மற்றும் பேட்டி கொடுக்கவோ கூடாது என அவருக்குஉத்தரவிட்டு உள்ளது.

இதேபோன்று புத்தகத்தில் இருந்து எடுத்த தொகுப்புகளை வெளியிடவும் தடை விதித்து உள்ளது. இதுதவிர, பத்திரிகைகளில் முன்பே வெளியிடப்பட்ட குற்றச்சாட்டு தொடர்புடைய கட்டுரையை நீக்கும்படி ஊடக நிறுவனங்களுக்கு கடிதம் எழுதவும் மன்பிரீத்தின் வழக்கறிஞர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.

இந்திய ஆடவர் மற்றும் மகளிர் ஆக்கி அணிகள் கூட்டாக சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், மரிஜ்னே தனது புத்தகம் பிரபலம் அடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த குற்றச்சாட்டுகளை தெரிவித்து உள்ளார் என்று தெரிவித்து இருந்தது.


Next Story