டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!


டெல்லியில் தீவிரமடைந்த காற்று மாசு! பனிமூட்டம் மூடியது போல காணப்படும் சாலைகள் - பொதுமக்கள் கடும் அவதி!
x

டெல்லி மற்றும் சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல தூசி நிறைந்து காணப்படுகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 385 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.

டெல்லி திர்பூர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு 594ஆக பதிவாகியுள்ளது. நொய்டாவில் 444ஆக பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'அபாயம்' என்ற நிலையை எட்டியது. குருகிராமில் 391 ஆக பதிவாகி 'மிகவும் மோசம்' என்ற நிலையில் நீடிக்கிறது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என் சி ஆர் பகுதிகளில் பனிமூட்டம் மூடியுள்ளது போல காற்றுமாசு காரணமாக தூசி நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை உடனடியாக மூடுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.மேலும், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி(செண்டிரல் விஸ்டா திட்டம்) மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story