டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!


டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசம்! கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை!
x
தினத்தந்தி 30 Oct 2022 5:29 AM GMT (Updated: 30 Oct 2022 5:30 AM GMT)

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையும் மீறி பலர் பட்டாசுகள் வெடித்து தீபாவளி கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லி மாறியது.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து 350 என்ற அளவில் பதிவாகியுள்ளது. அதாவது டெல்லி முழுவதும் காற்றின் தரம் 'மிகவும் மோசம்' என்ற நிலையை எட்டியது.

டெல்லி பல்கலைக்கழக பகுதியில் 355ஆக இருந்த நிலையில், இன்று 372ஆக உயர்ந்தது. மதுரா சாலை பகுதியில் 340ஆக இருந்த நிலையில், இன்று 364ஆக உயர்ந்தது. நேற்று மாலை காற்றின் தரக் குறியீடு அபாயம் என்ற நிலையை எட்டியது.

இதன் காரணமாக, காலையில் நடைபயிற்சி செய்பவர்கள், சைக்கிள் பயிற்சி செய்பவர்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாசு நிறைந்த காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளதாக கவலை தெரிவித்தனர்.

இதனையடுத்து, காற்று மாசு அதிகரிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அதன்படி, ராஜஸ்தானில் செயல்பட்டு வரும் 45 நிலக்கரி சார்ந்த தொழில் ஆலைகளை உடனடியாக மூடுமாறு காற்றின் தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, டெல்லியின் அண்டை மாநிலங்களான அரியானாவில் 17, உத்தரபிரதேசத்தில் 63 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுமானப் பணி(செண்டிரல் விஸ்டா திட்டம்) மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிட பணிகள் தவிர்த்து பிற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story