கேரள முதல்-மந்திரி மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து வீனா விஜயன் சுமார் 1 கோடியே 76 லட்சம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதுடெல்லி,
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் எக்சாலாஜிக் (Exalogic) என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தனியார் சுரங்க தொழில் நிறுவனமான சிஎம்ஆர்எல், வீனா விஜயனின் மென்பொருள் நிறுவனத்திடம் எந்த விதமான சேவையையும் பெறாமல் ஏறத்தாழ 1 கோடியே 76 லட்ச ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது.
மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புலனாய்வு அமைப்பு அளித்த பரிந்துரையை அடுத்து சட்டவிரோத பணப் பரிவர்த்தனை பிரிவின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட கொச்சின் மினரல் மற்றும் ருடைல் லிமிடெட் (சிஎம்ஆர்ல்) நிறுவனம் கேரளாவில் தாது மணல்களை அள்ள கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீனா விஜயனுக்கு கடந்த 2018 முதல் 2019 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கோடியே 76 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் புலானாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்கக் கோரி வீனா விஜயனின் எக்சாலாஜிக் நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தது. அந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையேதான் அமலாக்கத்துறையின் கேரளா பிரிவு வீனா விஜயனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.