மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!


மத்திய மந்திரி அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு..!
x

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் உள்துறை மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் கருத்துகளால் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சிறு விரிசல் ஏற்பட்டதாக வெளியே தெரிந்தது. ஆனால் அதன்பிறகு உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த ஒரு பேட்டியில் கூட்டணி இருப்பதாக உறுதி செய்தார். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் அதனை ஆமோதித்தார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் தனித்து களம் இறங்கிய அ.தி.மு.க. பின்னர் கூட்டணி கட்சியான பா.ஜனதாவின் வேண்டுகோளை ஏற்று தனது வேட்பாளரை திரும்ப பெற்றது. இதற்கிடையே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் கமிஷனும் அங்கீகாரம் அளித்தது. அவரது தலைமையிலான அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் என்பதும் உறுதியானது. இதனால் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த மகிழ்ச்சியான காலக்கட்டத்தில் அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டார். அதன்பேரில் நேற்று இரவு நேரம் கொடுக்கப்பட்டது. இதனை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி நேற்று கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சென்றனர். சென்னையில் இருந்து முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் டெல்லி சென்றார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனபிறகு முதல் முறையாக அவர் மேற்கொண்ட டெல்லி பயணம் இதுவாகும். டெல்லியில் மாலை 6.30 மணிக்கு விமானத்தில் வந்திறங்கிய அவரை விமான நிலையத்தில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், சந்திரசேகர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் இல்லத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அவருக்காக அரசு இல்லத்தில் இருந்து விமான நிலையத்துக்கு கார் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அரசு இல்லத்துக்கு செல்லாமல் அசோகா ஓட்டலுக்கு சென்றார்.

அங்கு சிறிது ஓய்வு எடுத்த அவர், இரவு 8.45 மணிக்கு உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க கிருஷ்ணமேனன் ரோடு இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார். இரவு 9 மணிக்கு பிறகு அமித்ஷாவுடன் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு 10 மணி வரை நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது அவர்கள் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து விவாதித்ததாக தெரிகிறது. இதற்கிடையே இன்று (வியாழக்கிழமை) பா.ஜனதா மூத்த தலைவர்களை எடப்பாடி பழனிசாமி சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

இந்த சந்திப்பின்போது பா.ஜனதா அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, முனுசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story